ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது இந்நிகழ்வில் கலந்து கொண்ட நாயகன் கமல்ஹாசன் பேசியதாவது, “
ஒரு சினிமாவை செய்து விட்டு, அதனை இரண்டாவது முறையாகச் செய்யும் போது, அதனை அதே இயக்குநர் இயக்குவது என்பது எனக்குத் தெரிந்து, இரண்டு பேர் அதனை செய்திருக்கிறார்கள். ஒருவர் செசில் பி டெமில், இன்னொருவர்ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்.
39 ஸ்டெப்ஸ் என்ற படத்தை முதலில் கருப்பு, வெள்ளையாக எடுத்த ஹிட்ச்காக். பின்னர் கலரில் எடுத்தார். அதே போல செசில் பி டெமில், 10 கமாண்ட்மென்ட்ஸ் என்ற படத்தை முதலில் கருப்பு வெள்ளையாக எடுத்தார். பின்னர் அதனை கலரில் எடுத்தார். இன்று வரையிலும் அதனை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இப்போது அந்த பெருமை ஷங்கருக்கு கிடைத்திருக்கிறது. ஷங்கருக்கு கிடைத்திருப்பதால், தற்போது அது எனக்கும் கிடைத்திருக்கிறது. பியூ சின்னப்பா நடித்த உத்தமபுத்திரன் திரைப்படத்தில், சிவாஜி கணேசன் நடித்தார். ஆனால், அப்போது அவர் இல்லை.நான் இந்தியன் 2 இரண்டாம் பாகத்தை பார்க்கிறேன். இந்தியன் முதல்பாகத்தின் டப்பிங்கின் போது, இதனை நாம் இரண்டாம் பாகமாக எடுக்கலாமே என்ற ஷங்கரிடம் கூறினேன்.அப்போது இருந்த படபடப்பே எங்களுக்கு அப்போது அடங்கவில்லை. இந்தியன் முதல் பாகத்தை எப்படியாவது ரிலீஸ் செய்வோம் சார் என்று ஷங்கர் சொன்னார். இரண்டாம் பாகம் எடுப்பதற்கு இன்றும் கதைகள் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. லஞ்சம் இன்னும் அதிகமானதன் காரணமாகத்தான், இந்தியன் தாத்தாவின் இரண்டாவது வருகைக்கு பெரிய அர்த்தமே உருவாகி இருக்கிறது.
.நான் மதிக்கும் நல்ல நடிகர்கள் இன்று நம்முடன் இல்லை. அவர்கள் இந்த விழாவில் பங்கேடுத்திருக்க வேண்டியவர்கள். மனோபாலா, நெடுமுடி வேணு, விவேக் போன்றவர்கள் இருந்திருக்க வேண்டியவர்கள். இப்போது தான் விவேக்கின் காட்சிகளை படமாக்கியதாக தோன்றுகிறது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதற்கு ‘இந்தியன்’ சீரிஸ் ஓர் உதாரணம்.
இயக்குநர் ஷங்கர் இன்றும் இளைஞராகவே இருக்கிறார்.இந்தப் படம் 5,6 வருடங்கள் எடுத்ததற்கு தொழில்நுட்ப கலைஞர்களோ, நடிகர்களோ காரணமில்லை. இயற்கை தான் காரணம். கோவிட், விபத்து என பல விஷயங்கள் இடையூறாக அமைந்தன.
இந்தப்படத்திற்காக 100 சதவீத உழைப்பைக் கொடுத்திருக்கிறார் அனிருத். இந்தப் படத்துக்காக உழைத்தவர்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு உழைத்ததாக தெரியவில்லை. மாறாக அவர்கள் சந்தோஷமாக உழைத்தார்கள்” என்றார்.