கல்கி 2898 AD.( விமர்சனம்.) காசியை மய்யப் படுத்தியதில் அரசியல் உண்டா ?
கல்கி அவதாரம் .. எம்பெருமான் திருமால் எடுக்கப்போகும் பத்தாவது அவதாரம். இந்து மத நம்பிக்கை. !!!!
அந்த அவதாரத்தின் காலம் எத்தகையதாக அமைந்திருக்கும் என்கிற கற்பனையே இந்த கல்கி 2898 கி. பி. இன்றைய மானுடனின் கற்பனை.
அணு யுகம் கடந்து வேறு மாதிரியான கண்டுபிடிப்புகள் அந்த கற்பனையுகத்தில் ! ஆனால் மனிதன் மட்டும் மாறாத அந்த உலகத்தில் உலவுகிறார் தீபிகா படுகோன். இவரது வயிற்றில் கடவுள் கருவாக உருவாகி வருகிறார்.
வற்றிய வயிறும் முற்றிய மூப்புமாக வாழ்கிற அறிவாளி சுப்ரீம் யாஸ்கின் இளமையை திரும்பப் பெற கர்ப்பிணிப் பெண்களின் சீரம் தேடி வேட்டையாடி வருகிறார். இவரது தளபதியிடம் மாட்டிய தீபிகா எப்படியோ தப்பி பிழைக்க இவரை காப்பாற்றுகிறார் அமிதாப் பச்சன் என்கிற அசுவத்தாமர்.
தேரோட்டி கிருஷ்ணனின் சினத்துக்கு ஆளான அசுவத்தாமர் குரு ஷேத்திரப் போரில் அவரது நெற்றிக் கல்லை இழந்து விட்டார். ஆனால் கல்கி அவதார காலத்தில் அந்த சக்திக் கல் மீண்டும் கிடைத்து விடுகிறது. இவரது வேலை தீபிகாவை காப்பாற்றுவது.
பூமியின் அத்தனை வளத்தையும் கையகப் படுத்திய சுப்ரீம் யாஸ்கின் தனி உலகத்தை உருவாக்கி அதற்கு காம்ப்ளக்ஸ் என பெயரிட்டு சர்வாதிகாரியாக இருக்கிறார்.
எவரும் எளிதில் புக முடியாத யாஸ்கினின் காம்ப்லக்ஸ்சுக்குள் நுழைந்தே ஆகவேண்டும் என்கிற இலக்குடன் தனி வாகனத்தில் அலைகிறார் பிரபாஷ் .
யாஸ்கினை அழிப்பதற்கு கடவுள் வந்தே தீருவார் என்கிற நம்பிக்கையில் ஷம்பாலா என்கிற இடத்தில் பதுங்கி வாழ்கிறார்கள் புரட்சியாளர்கள். இவர்களது தலைவி மரியம் ( ஷோபனா ) தளபதி பசுபதி.
யாஸ்கினின் தளகர்த்தர் சாஸ்வதா சட்டர்ஜியின் கடும் பிடியில் இருந்து தப்பிய தீபிகாவை மீட்டுக்கொண்டு வரும் பொறுப்பினை பெற்ற பிரபாஸ் ,அதற்கான முயற்சியில் ஈடுபட இதை தடுத்து போராடும் கடமையுடன் அமிதாப் மோத என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.!
அப்பாடா ,ஒரு வகையில் பாரதக் கதையையும் கற்பனை கேரக்டர்களையும் சொல்லிவிட்டேன்.. உங்களுக்கும் புரிந்திருக்கும். இரண்டு கற்பனைகளையும் இணைப்பதற்கும் ஒரு தில் வேண்டும்.
சற்றே குழம்பக் கூடிய கதையை ரசிக்கும்படியான கற்பனையுடன் கொடுத்திருக்கிற இயக்குநர் அஸ்வின் பாராட்டுக்குரியவர் .ஹாலிவுட்டின் தரத்தில் ஓர் இந்தியப்படம்.
நாயகன் பிரபாஷ் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் கல்கியின் முதல் பாகத்தில் அமிதாப் பச்சன்தான் உயர்ந்து இருக்கிறார். இவரது ஒப்பனையும் அதீத உயரமும் பிரம்மிக்க வைக்கிறது.
கதையில் லேட் என்ட்ரி பிரபாஷ் . அதனால்தானோ என்னவோ திஷா பதானியுடன் லவ் என்று சொல்லி ஆட விட்டிருக்கிறார் இயக்குநர். அவசியமில்லை என்றே எனக்குத் தோன்றியது.
இரண்டே காட்சிகளில் உலகநாயகன் கமல் வந்தாலும் சுப்ரீம் காட் இவரே என்கிற வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிற காம்ப்ளக்ஸ் சூப்பர் என்றால் யாஸ்கின் கமல் வடிவம் உச்சத்தின் உச்சம். ! வாவ்.கல்கி முதல் பாகம் இவரில் தொடங்க முடிவிலும் அவரே வந்து அடுத்த பாகத்துக்கு கட்டியம் சொல்கிறார். எந்த வேடம் கொடுத்தாலும் கமல் முத்திரையை அழுந்தப் பதித்துவிடுகிறார் கமல் . தமிழர்க்கு பெருமை.
கல்கி 2898 முதலாவது பாகத்தில் ஷோபனா ,பசுபதி,இயக்குநர்கள் ராம்கோபால் வர்மா ,எஸ். எஸ். ராஜமாவுளி, அனுதீப் ,துல்கர் சல்மான் ,விஜயதேவரக்கொண்டா ,ஆகியோரும் கேரக்டர்களாக கடக்கிறார்கள்.
நடிகர்களை பிரமாதமாக காட்டிய ஒளிப்பதிவாளர்ஜோர்ட்ஜே ஸ்டோஜில்ஜ்கோவிக் . மற்றும் விஎபெக்ஸ் வல்லவர்களை பாராட்டியே ஆகவேண்டும். இந்திய திரை உலக வரலாற்றில் இந்தப்படம் மிகப்பெரிய சாதனை. வாழ்த்துவோம் . பாராட்டி பரிசுகளை அளிப்போம் .
முதலும் முடிவும் காசியில்தான் என்பதில் அரசியல் எதுவும் இல்லையே !
–தேவிமணி