‘நீட்’ தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது!.நடிகர் விஜய் ஆவேசம்!!

கடந்த ஆண்டை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த முறையும்  10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில்  முதல் மூன்று இடங்கள் பெற்று தேர்ச்சியடைந்த  மாணவ,மாணவிகளை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் . இந்த முறை, இரண்டு  கட்டமாக  அதாவது, முதல் சந்திப்பு கடந்த 28ம் தேதி சென்னையில் நடந்தது அதில்மாநில அளவில் முதல் மூன்று ஐயங்களை பெற்ற  மாணவ மாணவிகளுக்கு வைரக்கம்மல் மற்றும் வைர மோதிரம் வழங்கி பாராட்டினார்    அதை தொடர்ந்து 2 வது கட்டமாக இன்று  காலை சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் நடந்தது.இந்த விழாவில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் என 19 மாவட்டங்களை சேர்ந்த அதிக மதிப்பெண்கள் பெற்ற  மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களுக்கு வாழ்த்துகளையும், பரிசு பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் உதவி தொகையையும் விஜய் வழங்கினார். பின்னர் அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் 740 மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் என மொத்தமாக 3500க்கும் அதிகமானோர்  பங்கேற்றனர். கடந்த முறை அதிகாலை 6 மணிக்கே விஜய் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்துவிட்டார். இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் மண்டபத்திற்கு வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிகவில் நடிகர் விஜய் பேசுகையில்,”இந்த விழாவில் நான் முதலில் எதுவும் பேச வேண்டாம் என்று தான் நினைச்சேன் ஆனா ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி இன்னைக்கு நான் பேசலைன்னா அது அவ்வளவு கரெக்டா இருக்காதுன்னு எனக்கு தோணுச்சு. அதான் அது  என்ன என்பது உங்களுக்கே தெரிந்து இருக்கும்.  ஆமாம் நீட் பத்தி தான் இன்னைக்கு நான் பேச போறேன் .தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ மாணவிகள், கிராமம்புறத்தில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை. இந்த நீட் தேர்வை பொறுத்தவரை மூன்று பிரச்னைகள் முக்கியமானவை. அதில் முக்கியமானது நீட் மாநிலக் உரிமைக்கு எதிராக இருக்கிறது. 1975-க்கு முன்னாள் கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. 1975-க்குப் பிறகுதான் அதை ஒன்றியப் பட்டியலில் சேர்த்தார்கள். எனக்கு தெரிந்து முதல் பிரச்னை அப்போது தான் தொடங்கியது.


ஒரே நாடு, ஒரே பாடதிட்டங்கள், ஒரே தேர்வு இது அடிப்படையிலேயே கல்விக் கற்கும் நோக்கத்துக்கு எதிரானதாகவே பார்க்கிறேன். கல்வி என்பது அந்ததந்த மாநிலங்களுக்கு ஏற்றார்போல்தான் இருக்க வேண்டும். இதை மாநில உரிமைகளுக்காக மட்டும் பேசவில்லை. கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள், பல்வேறு பார்வைகள் இருக்க வேண்டும். அதற்கான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பன்முகத்தன்மை என்பது பல்வீனமல்ல. அதுதான் பலம்.மாநில மொழியில், மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு, NCERT பாடத்திட்டத்தில் தேர்வு வைத்தால் அது எப்படி சரியாகும். அதுவும் கிராமப் புறத்தில் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு, குறிப்பாக மருத்துவத் துறை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு எவ்வளவு பெரிய கடினம் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். கடந்த மே மாதம் 5-ம் தேதி நடந்த தேர்வும், அதைத் தொடர்ந்து வெளிவந்த நீட் குளறுபடிகள் தொடர்பான செய்திகளையும் பார்த்தோம். அதற்குப் பிறகு நீட் தேர்வு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது. நாடு முழுவதும் நீட் தேர்வு தேவையில்லை என்பதை இந்த நிகழ்வுகள் மூலம் புரிந்துகொண்டோம்.இதற்கான தீர்வு என்ன… நீட் விலக்கு மட்டும்தான் உடனடித் தீர்வு. நீட் விலக்குக் கோரி தமிழக சட்டமன்றம் கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல், தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வை புரிந்துகொண்டு, அதற்கு மதிப்பு கொடுத்து, இதை விரைவில் பரிசீலனை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். ஒருவேளை அதில் சிக்கல்கள் இருந்தால், இடைக்காலத் தீர்வாக இந்திய அரசு, அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி, சிறப்பு பொதுப்பட்டியல் ஒன்றை உருவாக்கி, அதில், கல்வி, சுகாதாரத்துறையை இணைக்க வேண்டும்.

இப்போது இருக்கும் பொதுப்பட்டியலில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், மாநில அரசுகளுக்கு அதில் என்னதான் அதிகாரம் இருந்தாலும், அது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பட்டில்தான் இருக்கிறது. எனவே, கல்வி விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். ஒன்றிய அரசு அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வு நடத்த வேண்டுமானால் நடத்திக்கொள்ளட்டும்.

இது நடக்குமா… நடந்தாலும் அதை நடக்க விடமாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆனாலும், இந்த சந்தர்ப்பத்தில் என் கருத்தை தெரிவித்து கொள்கிறேன். ஜாலியா படிங்க… இந்த உலகம் மிகப் பெரியது. வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. ஒன்று உங்களை விட்டு தவறுகிறது என்றால், அதைவிட வேறு ஒன்று பெரிதாக கடவுள் உங்களுக்காக வைத்திருக்கிறார் என்று அர்த்தம். அதை தேடி கண்டுபிடியுங்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நிச்சயம்.”  இவ்வாறு அவர் பேசினார்