இருபத்தியெட்டு ஆண்டு கால காத்திருப்பு -எதிர்பார்ப்பு ,
இந்தியன் 2.
இயக்குநர் ஷங்கர் – உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்த படம். தொல்லைகள்,துயரங்கள் ,இன்னல்கள் ,இடையூறுகள் கலைந்து தற்போது வெளியாகியுள்ள திரைப்படம்.
நமது காத்திருப்பும் எதிர்பார்ப்பும் பலன் கொடுத்துள்ளதா ?
படம் பார்த்துவிட்டு திரும்புகிற போது மனசு கேட்டது ” மலைகளுக்கும் சாலைகளுக்கும் வண்ணம் பூசுகிற பிரமாண்ட எண்ணத்திலிருந்து ஷங்கர் இன்னும் விடுபட வில்லையா?காட்சிகளில் பிரமிப்பு இருந்தால் மட்டும் போதும் கதையைப் பற்றி கவலைப்படமாட்டார்கள் என்று நினைக்கிறாரா ?” இப்படியாக சில பல கேள்விகள்.
இந்தியன் 2 கதை சுருக்கமாக ..
சித்தார்த் குழுவினர் ‘பார்க்கிங் டாக்ஸ் ‘ அதாவது குரைக்கும் நாய்கள் என்கிற தலைப்பில் சோஷியல் மீடியாவில் விழிப்புணர்வு ஊட்டுகிறார்கள் . எங்கெல்லாம் லஞ்சம் தாண்டவமாடுகிறது என்பதை வீடியோ எடுத்துக்காட்டுடன் அம்பலப் படுத்தும் அவர்களுக்கு ஒரு கட்டத்தில் சலிப்புடன் ஆத்திரமும் வந்து விடுகிறது. இந்தியன் தாத்தா வந்தால்தான் தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் சமூக வலைத்தளங்கள் வழியாக ‘கம் பேக் இந்தியன் தாத்தா ‘ என்கிற ஹேஷ் டாக் அழைப்பு விடுகிறார்கள். சோஷியல் மீடியாவின் வலிமை எத்தகையது என்பதை மக்களுக்கு உணர்த்துகிற சிறந்த காட்சி. ( பாராட்டலாம்.)தைவானில் இருக்கும் இந்தியன் தாத்தா சேனாபதி வருகிறார் . வேட்டையாடுகிறார். இவரை வா வா என விரும்பி அழைத்த பாரக்கிங் டாக்ஸ் குழுவினரே “கோ பேக் இந்தியன் தாத்தா ” என்கிற ஹேஸ் டாக் போட்டு வெறுப்பினை உமிழ்கிற நேரமும் பின்னர் வருகிறது.. ஏன் ,எதனால் என்பதை தியேட்டருக்கு சென்று பார்த்துக் கொள்க .
பல்லாயிரம் கோடி வங்கிக் கடனை வாங்கி அதை மொத்தமாக முழுங்கிவிட்டு மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த மவராசனை சேனாபதி கமல்ஹாசன் போட்டுத்தள்ளுவதில் இருந்து சூடு பிடிக்கிறது.காலண்டருக்கு கலர் புல்லான ஜிகினா சுந்தரிகளை படம் பிடித்துப் போட்ட அந்த மலை முழுங்கி மல்லையாவை நினைவு படுத்துகிறார் குல்ஷன் குரோவர். அரசாங்கத்தை ஏமாற்றி சென்ற அந்த மத்தாப்பு சுந்தரனை இந்திய அரசினால் பிடிக்க முடியவில்லை என்பது எவரெஸ்ட் உயர அவமானம் !அதை சொல்லியிருக்கலாம் .
குஜராத் குபேரனுக்காக தங்க அரண்மனை. கோடம்பாக்கத்து மயன் முத்துராஜ் கட்டியது. மலை ,சாலைகளுக்கு பெயிண்ட் அடித்த பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் கனவு மாளிகை போலும், கதைக்கு வலுவேற்ற முடியாவிட்டாலும் இத்தகைய கற்பனை வளம் ஷங்கருக்கு அதிகமாகவே இருக்கிறது,படம் முழுமையும் !!
இந்தியன் 2 -வின் வலிமை ,பெருமை ,சாதனை அனைத்தும் கமல்ஹாசனுக்கே .! இவரின்றி ஒரு பெருமையும் இயக்குநருக்கு இல்லை என்பது இண்டர்நேஷனல் ட்ரூத் .! பிராணனை வாங்கும் பிராஸ்தடிக் மேக்கப் போட்டுக்கொண்டு இந்த வயசிலும் இளையவரைப் போல துள்ளி விளையாடி நடிக்கும் இவர் பிரைட் ஆப் இந்தியா . இந்தியாவின் பெருமை.. ஒற்றை சக்கர பைக்கில் மனிதர் எப்படி பேலன்ஸ் பண்ணினார்.? வியப்புடா வந்தியத் தேவா! சித்தார்த்துக்கு பொண்டாட்டி அமைந்த ராசி. இவர் வந்த பிறகு அரை மணி நேரம் சென்ற பிறகுதான் உலகநாயகனே வருகிறார். அவ்வளவு முக்கியம் இந்த கேரக்டருக்கு.!
இவருக்கு ஜோடி ரகுல் பிரீத் சிங் . கண்ணடித்து களவாணித்தனம் பண்ணக்கூட ஒரு சீன் இல்லையே ராஜா !
அப்பா சார் சமுத்திரக்கனி. சிறிது நேரமே வந்தாலும் மனசுக்குள் உட்கார்ந்து விடுகிறார்.
தாத்தாவைப் பிடிக்க வேண்டிய சிபிஐ அதிகாரி பாபி சிம்ஹா . இவரது கைத்தடி விவேக். இருவருக்கும் வாய்ப்பே இல்லை நடிப்பதற்கு.!
நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், ரேணுகா, மனோபாலா, எஸ்.ஜே.சூர்யா, தம்பி ராமையா, காளிதாஸ் ஜெயராம், இமான் அண்ணாச்சி, வினோத் சாகர் என்று நீளுகிறது பட்டியல்.
ஸ்டண்ட் சீன்களுக்கு அன்பறிவு, , அனல் அரசு, பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா, தியாகராஜன் ஆகியோர் பொறுப்பு. திணற, திணற சீன் பிடித்திருக்கிறார்கள். அத்தனையையும் சிறப்புடன் ரவிவர்மன் படம் பிடித்திருக்கிறார்.
இசை ? அனிருத் ! தட்ஸ் ஆல் ! பெரிய இடம் .!
“கோ பேக் “போடுகிற பார்க்கிங் டாக்ஸ் நண்பர்கள் நாலு விழிப்புணர்வாளர்களுக்கும் தங்கள் வீடுகளில் இருக்கிற ஊழல் உத்தமர்களை தெரியவே தெரியாது என்று சொன்னது சங்கர் சார் உருட்டியதிலேயே பெரிய உருட்டு.!
உலகநாயகனின் புகழுக்கு ஷங்கர் வேட்டு வைக்க நினைக்கிறாரோ ?
–தேவிமணி