தனுஷ், எழுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம், ராயன். இதில், தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன், திலீபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தனுஷின் சிறு வயதிலேயே அவரது, அப்பா, அம்மா இருவரும் மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள். குடும்பத்தில் மூத்த மகனான தனுஷ், தன்னுடைய தம்பிகளான சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், தங்கையான துஷாரா விஜயன் ஆகியோரை பாதுகாத்து, வளர்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சென்னைக்கு வருகிறார்கள். இவர்களின் நிலையை கண்டு, செல்வராகவன் இவர்களுக்கு உதவி செய்கிறார்.
தனுஷ், செல்வராகவனின் மூலம் கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து, தம்பிகளையும், தங்கையையும் வளர்த்து வருகிறார். நாளடைவில், தனுஷின் முதல் தம்பியான சந்தீப் கிஷன் அடிதடி செய்பவராகவும், இன்னொரு தம்பியான காளிதாஸ் ஜெயராம் கல்லூரியிலும் படித்து வருகிறார். இந்நிலையில், சரவணன் – எஸ்ஜே சூர்யா என, இரண்டு பெரிய தாதாக்களுக்கிடையே நடக்கும் மோதலில் எதேச்சையாக சிக்குகிறார், சந்தீப் கிஷன். இதனால்ச் மொத்த குடும்பமும் இவர்களிடம் மாட்டிக்கொள்கிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் ராயன் படத்தின் கதை!
ராயன், தனுஷின் நடிப்பில் வெளியான 50 வது படம். அவருடைய இயக்கத்தில் வெளியான 2 வது படம். நடிப்பு, இயக்கம் இந்த இரண்டிலும் குறிப்பிட்ட அளவு கவனம் ஈர்த்திருக்கிறார், என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, தனுஷின் ரசிகர்களுக்கும், ‘புதுப்பேட்டை’ படத்தினை ரசித்தவர்களுக்கும், இது கண்டிப்பாக பிடிக்கும்.
தனுஷ், மொட்டைத்தலையும், முரட்டு மீசையுமாக ‘ராயன்’ கதாபாத்திரத்தில் கம்பீரமாக வலம் வருகிறார். தம்பிகளின் மீது அக்கறை கொள்ளும் விதமும், தங்கையிடம் காட்டும் பாசமும் நெகிழச்செய்கிறது. அதே சமயத்தில், துரோகத்தின் வலியை கண்கள் மூலம் வெளிப்படுத்தும் விதத்தில், தனுஷ் ரசிகர்களை கலங்கடித்து விடுகிறார். ஆக்ஷன் காட்சிகளில், மாஸோ… மாஸ்..!
தனுஷின் தம்பிகளாக நடித்திருக்கும் சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம், இருவருக்குமே நடிப்பதற்கு சமமான வாய்ப்பு. இதில், சந்தீப் கிஷனின் கதாபாத்திரம் சரியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், காளிதாஸ் ஜெயராம் கதாபாத்திரம் சரியாக வடிவமைக்கப்படவில்லை! இது படத்திற்கான பலவீனம்!
தனுஷின் தங்கையாக நடித்திருக்கும் துஷாரா விஜயன், நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். இவரது கதாபாத்திரமும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது?
சந்தீப்கிஷனின் காதலியாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி, அட்டகாசமாக நடித்திருக்கிறார். குத்து பாடல் ஆட்டத்திலும், நடிப்பதிலும் மிகச்சரியாக கதாபாத்திரத்திற்கேற்றபடி பொருந்தியிருக்கிறார்.
ஒரு சில காட்சிகளில் வரலட்சுமி சரத்குமார், ஒகே!
வில்லன்களில் ஒருவராக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, வழக்கமான கலக்கல் நடிப்பில் கவருகிறார்.
இன்னொரு வில்லனாக சரவணன், சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
செல்வராகவன், கிரேட்! பிரகாஷ்ராஜ், திலீபன், ஆகியோர் திரைக்கதை நகர்விற்காக! பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
பின்னணி இசை மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார், ஏ.ஆர்.ரஹ்மான்.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு, படத்தின் பலம்!
மொத்தத்தில், இந்த ‘ராயன்’ தனுஷின் ரசிகர்களுக்காவும், ‘புதுப்பேட்டை’ படத்தினை ரசித்தவர்களுக்காகவும்.