மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான ‘கெவி’!
கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள ‘வெள்ளக்கெவி’ கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி நிஜமான சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள புதிய படம் ‘கெவி’. ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக ஆதவன் அறிமுகமாகிறார். ‘டூ லெட்’, ‘மண்டேலா’ உள்ளிட்ட படங்களின் நாயகி ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ‘சின்னத்திரை’ ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் ஃபரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது..இப்படம் குறித்து அதன் நாயகன் ஆதவன் கூறுகையில், “’கெவி’ படத்தில் மலைக் கிராமத்தில் வசிக்கும், எந்தப் பிரச்சனைக்கும் போகாத ஒரு சாதாரண இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆனால் அந்த கிராமத்திற்கு அவனால் ஒரு பிரச்சனை வந்த போது அதை சமாளிக்க முடிந்ததா? என்பது போல எனது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் எனது தலை முடியையும் தாடியையும் வெட்டாமல் வளர்த்தேன். கிட்டத்தட்ட 110 நாட்கள் வெள்ளக்கெவி பகுதியில் கோடை காலம், குளிர் காலம் என இரண்டு சீதோஷ்ண நிலையிலும் படப்பிடிப்பு நடத்தினோம். அதிலும் கோடைகாலத்தில் இந்தப் பகுதியில் தண்ணீரே கிடைக்காது. படத்தில் முதல் 20 நிமிடம் தான் நான் முழு ஆடையுடன் வருவேன். அதன் பிறகு மீதி படம் முழுவதும் ஒரு காக்கி டவுசர் மட்டுமே எனது உடையாக இருக்கும். இந்த உடையுடன் குளிர்காலத்தில் வனப்பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பில் உடலெங்கும் சேரும் சகதியுமாக பூசிக்கொண்டு நடித்தது மிகக் கடினமான விஷயமாகவே இருந்தது.இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மலை உச்சியில் கிட்டத்தட்ட ஒன்றரை நாட்கள் படமாக்கப்பட்டது. அங்கே எளிதாக சாப்பாடு கொண்டு செல்ல முடியாததால் ஒரு கேன் தண்ணீரை வைத்துக் கொண்டு சமாளித்து படப்பிடிப்பை நடத்தினோம். படத்தின் நாயகியான ஷீலா நாற்பது நாட்களுக்கும் மேல் வெயிலிலும் குளிரிலும் மெனக்கிட்டு நடித்தார். இவ்வாறு அவர் கூறினார்