2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் களமிறங்குவதை இலக்காகக் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார் நடிகர் விஜய். சமீபத்தில் விஜய் கட்சியின் கொடி, பாடல் வெளியிடப்பட்டு பேசு பொருளானது.செப்டம்பர் 23-ந் தேதி விஜய் கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மதுரை,திருச்சி, சேலம், ஈரோடு என பல நகரங்களில் மாநாட்டு இடம் தேர்வு செய்யப்பட்டு கைவிடப்பட்டது. பின்னர் ஒருவழியாக விக்கிரவாண்டியில் தற்போது இடம் தேர்வாகி இருக்கிறது. இந்த இடத்தில் மாநாடு நடத்துவதற்காக முறையாக போலீஸ் அனுமதி கேட்டுள்ளது நடிகர் விஜய் கட்சி. இதனைத் தொடர்ந்து போலீசாரும் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு 21 கேள்விகளை அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. அதில், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் வரும் பாதைக்கான ஏற்பாடு என்ன? மாநாட்டிற்கு எத்தனை வாகனங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது? மாநாட்டில் பங்கேற்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு ஏற்பாடு என்ன? மாநாட்டில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு உணவு எப்படி வழங்கப்பட உள்ளது?
பொதுவாக எந்த ஒரு கட்சி மாநாடு நடத்தினாலும் இது போன்ற கேள்விகளை போலீசார் கேட்பது வழக்கம்தான். இந்த நிலையில் மாநாட்டுக்கான இடமே இன்னமும் முடிவாகாத நிலையில் மாநாட்டை ஒத்திவைப்பது தொடர்பாகவும் நடிகர் விஜய் தரப்பு ஆலோசிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 3 மாதங்களுக்கு மழை காலம் என்பதால் ஜனவரியில் மாநாட்டை நடத்தலாமா? என ஆலோசனை நடத்தி வருவதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ‘திட்டமிட்டபடி வரும் செப்டம்பர் 23 ம் தேதி மாநாடு நடக்கும். மாநாடுக்கான அனுமதி இன்று அல்லது நாளைக்குள் கிடைத்து விடும்’ என அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்




