நடிகர் சித்தார்த்-நடிகை அதிதி ராவ் திருமணம் !

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.சென்ற ஆண்டு வெளியான சித்தா படம் வெற்றிக்குப் பிறகு நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கவுள்ளதாகக் கூறியிருந்தார்.இந்த நிலையில் நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் காதலில் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள்  பரவியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் அடிக்கடி  பொது இடங்களில் வலம் வரத்  தொடங்கினர். மேலும், இருவரும் தங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்டதை வெளிப்படையாகத் தெரிவிக்கும் விதமாக கடந்த மார்ச் 28 அன்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தனர்.விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியிடுவோம் என்றும் கூறியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து,  நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். இதில் இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும்நெருங்கிய  நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண  புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். சித்தார்த் – அதிதி தம்பதிக்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்