பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா( வயது 85). இவர் பெங்களூருவில் உள்ள ஜஸ்வந்த்பூரில் தனது மகள் செல்வியுடன் வசித்து வந்தார். நேற்று மாலை அவருக்கு ‘திடீர்’ மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்..அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சி.ஐ.டி. சகுந்தலா உயிரிழந்தார் . அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதி சடங்கு இன்று மாலை பெங்களூருவில் நடந்தது
.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 1970ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ’சிஐடி சங்கர்’ படத்தில் அறிமுகமானதால், அதன் பிறகு ‘சிஐடி’ சகுந்தலா என்று அழைக்கப்பட்டார். சேலம் மாவட்டத்தின் அரிசிபாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்தார். சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்தார். அப்போது கிடைத்த அறிமுகங்களின் மூலம் 1960-ம் ஆண்டு ‘கைதி கண்ணாயிரம்’ என்ற படத்தில் நடன கலைஞராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தார். 1970-ம் ஆண்டு வெளியான ‘சி.ஐ.டி. சங்கர்’ என்ற படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த படத்திற்கு பிறகு அவர் ‘சி.ஐ.டி’. சகுந்தலா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.
படிக்காத மேதை, நினைவில் நின்றவள், ஒளிவிளக்கு, என் அண்ணன், ஜஸ்டிஸ் விஸ்வநாதன் புதிய வாழ்க்கை, இதய வீணை, ராஜராஜ சோழன், தேடி வந்த லட்சுமி, பாரத விலாஸ், தெய்வ பிறவி போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.மலையாளம், தெலுங்கு, கன்னட படங்கள் என 600-க்கும் மேற்பட்ட படங்களில் சி.ஐ.டி. சகுந்தலா நடித்துள்ளார்.கடந்த 1998-ம் ஆண்டுக்குப் பிறகு வயது மூப்பு காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.அதன் பிறகு டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார். குடும்பம், சொந்தம், வாழ்க்கை, அக்னி சாட்சி, கஸ்தூரி, பூவிலங்கு, கல்யாண பரிசு, தமிழ்ச்செல்வி போன்ற பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.