‘மெய்யழகன்’ விமர்சனம்!
அர்விந்த்சாமியின் விடலைப்பருவத்தில், சொந்த சகோதரியிடம் ஏற்பட்ட சொத்து பிரச்சனையின் காரணமாக அவரது அப்பா ஜெயப்பிரகாஷ் தஞ்சாவூரை விட்டு சென்னையில் குடும்பத்துடன் குடியேறுகிறார். 20 வருடங்களுக்கு மேல் கடந்த நிலையில், சித்தப்பா மகளின் வற்புறுத்தலின் பேரில் அவரது கல்யாணத்திற்காக அர்விந்த்சாமி தஞ்சாவூர் செல்கிறார். அங்கு உறவினர் கார்த்தி அறிமுகமாகிறார். அப்போது கார்த்தி அர்விந்த்சாமியுடன் மிகவும் நெருக்கமாக பழகுகிறார். அதோடு கார்த்தி அர்விந்த்சாமிக்கு தேவையானவற்றை செய்து வருகிறார். ஆனால், கார்த்தியை அவருக்கு எந்த வகையில் சொந்தம் என தெரியவில்லை. அதோடு கார்த்தியின் உபசரிப்பில் அதிசயித்து போய் அவரை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார். இதன் பிறகு அர்விந்த்சாமியிடம் ஏற்படும் மாற்றமே மெய்யழகன் படத்தின் கதை.
வெகுளித்தனம் கொண்ட, தஞ்சையைச் சேர்ந்த கிராமத்து இளைஞராக நடித்திருக்கிறார் கார்த்தி. உறவுகளிடம் காட்டும் பாசம், விட்டுக்கொடுக்கும் மனோபாவம், மனதில் பட்டதை பேசுபவராக உனர்வுகளை வெளிப்படுத்தி அழகாக நடித்திருக்கிறார். சில இடங்களில் சிரிக்கவும், சிலைடங்களில் கண்கலங்கவும் வைக்கிறார்.
அர்விந்த்சாமியின் கதாபாத்திரமும் கார்த்தியின் கதாபாத்திரத்திற்கு இணையானது. சிறுவயதில் விளையாடித்திரிந்த சொந்த ஊரின் மீது உள்ள ஈர்ப்பினையும், ஏக்கத்தினையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கார்த்தியின் மனைவியாக நடித்த ஸ்ரீ திவ்யா, சில காட்சிகள் என்றாலும் நிறைவான நடிப்பு. அரவிந்த்சாமியின் மனைவியாக தேவதர்ஷினி, ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், இளவரசு, கருணாகரன், ஸ்ரீரஞ்சனி என அனைவருக்கும் ஒரு சில காட்சிகளில் நடிப்பதற்கு மட்டுமே வாய்ப்பு இருந்தாலும் நிறைவாகவஏ நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை. இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்.
படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ், படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். குறிப்பாக சொழர்கள் வரலாறு, ஜல்லிக்கட்டு காட்சிகள், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, ஈழத்தமிழர்கள் படுகொலை இவற்றில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நீளம் படத்தின் பலவீனமாக இருக்கிறது. இந்தக்காட்சிகள் படத்திற்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறது.
மற்றபடி, கார்த்தி மற்றும் அர்விந்த்சாமியின் காம்பினேஷன் ரசிக்கும்படி இருக்கிறது. வெவ்வேறு குணாதிசயங்களை கொண்ட இருவரைப் பற்றிய திரைக்கதையில் இன்னும் கூடுதல் சுவாரசியம் சேர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
மொத்தத்தில், ‘மெய்யழகன்’ அனைவருக்குமானவன்.