‘மெய்யழகன்’ படத்தின் 18 நிமிட காட்சிகளை நீக்கியது ஏன்?-இயக்குனர் பிரேம்குமார்.
கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான ’மெய்யழகன்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி சம்பந்தப்பட்ட 18 நிமிட காட்சிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்காட்சிகளை வெட்டி தூக்கியது ஏன் என்பது குறித்து இயக்குனர் பிரேம்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ” மெய்யழகன் படத்தின் நீளம் குறித்து மட்டும் சில அக்கறை குரல்கள் வெளிப்பட்டு வந்த நிலையில், ஒரு படைப்பாளியின் முதல் கடமை மக்களின் குரல்களுக்கு செவிமடுப்பது. எல்லோரது திருப்தியும் எனக்கு முக்கியம். அதுவே மெய்யழகனின் மீது நீங்கள் கொண்ட அன்பிற்கு நான் செய்யும் கைம்மாறு.எனவே தற்போது சில காட்சிகள் நீக்கப்பட்டு, 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும். மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அவன் பேசும் அன்பும், திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்