கப்புள் கிரியேஷன்ஸ் , எஸ் கே டி ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் தமிழ்த் திரை உலகில் முதல் முதலாக நிஜமான கணவன் மனைவி சதா நாடார் -மோனிகா செலினா தம்பதிகள் கதை மாந்தர்களாக நடித்து இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘ல் தகா சைஆ ‘ இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் இப்படத்தைத் தயாரித்து, இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள சதா நாடார் பேசும் போது,
”ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு சென்னையே புதிதாக இருந்தது. சினிமா வேறொரு பிம்பத்தைக் காட்டியது. யாரை நம்புவது யாரைநம்பக்கூடாது என்று புரியவே இல்லை. இந்தப் படத்தை எடுத்து முடிப்பதற்கு முன்னால் நான் இரண்டு கோடி ரூபாய் இந்த சினிமாவில் இழந்தேன். அதற்குப் பிறகுதான் பலதும் புரிந்தது. சினிமாவில் இழந்ததை சினிமாவில் தான் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து நானே தயாரித்து நானே இயக்கி நானே நடிப்பது என்று தீர்மானித்து இந்தப் படத்தை எடுத்துள்ளேன்.இந்த சினிமாவைக் கற்றுக் கொள்வதற்கு வகுப்புகளுக்கு எல்லாம் செல்வார்கள். ஆனால் நான் 2 கோடி ரூபாய் செலவு செய்து இந்த சினிமாவைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.எத்தனையோ தவறான ஆட்களைச் சந்தித்து எங்கெங்கோ முட்டி மோதி, இப்போது எல்லா ஆட்களும் நன்றாக சரியாக அமைந்து இந்தப் படம் வெளியிடும் நிலைக்கு வந்துள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.இப்படம் உருவாவதற்கு ஒரு முதுகெலும்பு போல் இருந்தது இப்படத்தின் நாயகியும் என் மனைவியுமான மோனிகா செலினாதான்.பெயரின் ஏன் ஜாதி பெயர் என கேட்கிறார்கள்.அது என் அடையாளம். நான் எந்தப் பின்புலத்தில் இருந்து வருகிறேன் என்பது தெரிவதற்காக வைக்கப்பட்டது.ஆந்திராவில் கேரளாவில் எல்லாம் கவுடா மேனன், நாயர் என்று பெயருடன் வைத்துக் கொண்டுள்ளார்களே “தங்கலான ஜாதிப் படமா இல்லையா? சொல்லுங்கள். அதற்காக பா ரஞ்சித் ஜாதி வெறியர் இல்லை என்று சொல்ல முடியுமா?அவர் ஜாதி வெறி பிடித்துதான் படம் எடுக்கிறார் .நான் பெயரில் தான் ஜாதியை இணைத்து வைத்துள்ளேனே தவிர, என் படம் ஜாதியைப் பற்றி பேசவில்லை. பேசாது.” இவ்வாறு அவர் பேசினார்.