ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயபால்.ஜெ இயக்கத்தில், விக்ராந்த் நாயகனாகவும், ரித்விகா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தீபாவளி போனஸ்’. எளிய மக்களின் வாழ்க்கை போராட்டங்களை குறிப்பாக தீபாவளி போன்ற பெரும் பண்டிகை காலங்களை கொண்டாடுவதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை எதார்த்தமான வாழ்வியலாகவும், குடும்பத்தோடு பார்க்கும் கமர்ஷியல் படமாகவும் உருவாகியிருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் பல தரமான சிறு முதலீட்டு படங்களை வெளியிட்டு வரும் ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதோடு, படத்தின் வியாபாரம் மற்றும் விளம்பர பணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவரது முயற்சியின் மூலம் ‘தீபாவளி போனஸ்’ சுமார் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சி பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பத்த்ரிகையாளர்கள் படம் மிக எதார்த்தமாகவும், மக்களின் வாழ்வியலாகவும் இருப்பதாக பாராட்டியதோடு, படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் விஜய் ரசிகர்களுக்கான தீபாவளி கொண்டாட்டமாகவும் இருக்கும், என்றும் பாராட்டியுள்ளனர். மேலும், படக்குழுவினர் தங்களது அனுபவங்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்துக் கொண்டார்கள்.
நடிகை ரித்விகா பேசுகையில்,
இந்த படத்திற்காக என்னை தொலைபேசியில் தான் முதலில் தொடர்பு கொண்டார் இயக்குநர் ஜெயபால். அப்போது ஒரு ஒன்லைன் சொன்னார், அதை கேட்டதும் இந்த படம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்தேன்.
இயக்குநர், தயாரிப்பாளர், உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் என அனைவரும் புதியவர்களாக இருந்தார்கள், அவர்களின் செயல் என்னை அதிகம் கோபப்பட வைக்கும். இருந்தாலும் அதை எல்லாம் சமாளித்து சிறப்பாக பணியாற்றினார்கள். என்னிடம் 22 நாட்கள் கேட்டார்கள், ஆனால் என்னுடைய பகுதியை 19 நாட்களில் முடித்து விட்டார்கள்.
நாயகனாக நடித்த விக்ராந்த் நல்ல நடிகர், அவரால் இன்று இங்கு வர முடியவில்லை. அவருக்கு இன்னும் நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். என்னுடைய மகனாக நடித்த குட்டி பையன் ஹரிஷ் சிறப்பாக நடித்தார். எனக்கும், விக்ராந்துக்கும் அடுத்து என்ன வசனம், என்ன காட்சி என்று தெரியாது, ஆனால் அந்த குட்டி பையனுக்கு எல்லாமே தெரியும். அந்த அளவுக்கு அவனுக்கு பயிற்சி கொடுத்திருந்தார்கள். அவன் மட்டும் அல்ல, படத்தில் சிறு சிறு வேடத்தில் நடித்தவர்களுக்கு கூட இயக்குநர் பயிற்சி கொடுத்திருந்தார், அதை என்னிடம் வீடியோவாக இயக்குநர் காண்பித்து, நாங்கள் இவ்வளவு தயாராக இருக்கிறோம் இப்போது நீங்கள் படப்பிடிப்புக்கு வந்தால் சரியாக இருக்கும் என்று நம்பிக்கை கொடுத்தார். நன்றி ஜெயபால் சார். நல்ல டீம், நல்ல படம் கொடுத்திருக்கிறார்கள்.
என் வாழ்க்கையில் நான் தீபாவளி போனஸ் வாங்கியதில்லை. உங்களுக்கே தெரியும் சினிமாவில் யாருக்கும் போனஸ் என்பது இல்லை. நான் படிப்பு முடிந்ததும் சினிமாவுக்குள் வந்துவிட்டேன், அதனால் நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் போனாஸ் வாங்கும் வாய்ப்பும் அமையவில்லை. ஆனால், இந்த 2024 ஆம் ஆண்டு எனக்கு தீபாவளி போனஸ் கிடைத்திருக்கிறது. எனவே நீங்கள் அனைவரும் எனக்கு சப்போர்ட் பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.
இயக்குநர் ஜெயபால்.ஜெ பேசுகையில்,
“இயக்குநராக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பைலட் படம், ஆவணப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்த போது தான் உலக மாணவர்கள் ஆந்தம் என்ற பாடல் இயக்க வாய்ப்பு கிடைத்தது. மதன் கார்கி எழுதின அந்த பாடலை இயக்கினேன். சுமார் 78 நாடுகளில் யுனெஸ்கோவால் அந்த பாடல் ஒளிபரப்பட்டு வருகிறது. பிறகு விளம்பர படங்களை எடுக்க தொடங்கி தற்போது நான் ஆசைப்பட்டது போல் இயக்குநராகியிருப்பது மகிழ்ச்சி.
எளிய மக்களின் வாழ்வியலை எதார்த்தமாகவும், கமர்ஷியலாகவும் சொல்லியிருக்கிறேன். நிச்சயம் படம் மக்களுடன் கனெக்ட் செய்யும் என்று நம்புகிறேன். இனி உங்களிடம் தான் இருக்கிறது. பல படங்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் ஊடகங்கள் எங்கள் தீபாவளி போனஸ் படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சினிமாவில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக கடந்த நான்கு வருடங்களாக ஓடிக்கொண்டிருந்தேன். அதனால், என் மனைவி, பிள்ளைகளை நான்கு வருடங்களாக பார்க்கவில்லை, இந்த நேரத்தில் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஒரு முறை என் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.