‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றும் கூட்டம்! திமுக மீது விஜய் கடும் தாக்கு!!
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாலை 4 மணிக்குத் தொடங்கியது.நடிகர் விஜய், மாநாட்டுக்கு வந்து, திடலில் இருந்த ரசிகர்களைச் சந்தித்தார். அதன்பின், கட்சியின் கொள்கைகளை விளக்கும் ஒரு காணொளி திரையிடப்பட்டது.
அதன்பின், விஜய் தனது கட்சியின் கொடியை பட்டன் அழுத்தி ஏற்றினார். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசியல் களத்தில் ஓர் அரசியல் தலைவராக தவெக மாநாட்டில் தனது கன்னிப் பேச்சை விஜய் தொடங்கினார். அவர் பேசுகையில், “அரசியல் பாம்பு, அதை பயமறியா ஒரு குழந்தையை போலக் கையில் பிடித்து விளையாடுகிறேன்.
அரசியலில் நான் ஒரு குழந்தை என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் பாம்பைக் கண்டு எனக்கு பயமில்லை. அரசியல் ஒன்றும் சினிமா கிடையாது, போர்க்களம். சீரியஸாக சிரிப்போடு எண்ணங்களை செயல்படுத்துவதுதான் என் வழி. கவனமாகக் களமாடவேண்டும். பாடல் வெளியீட்டு நிகழ்வில் பேசியதிலிருந்து வித்தியாசமான மேடை.
“பகுத்தறிவுப் பகலவன் பெரியார் கட்சியின் கொள்கை வழிகாட்டியாக இருப்பார். ஆனால், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விஷயத்தில் அண்ணாவின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை பின்பற்றுவோம். அதாவது, ஒவ்வொரு தனி மனிதரின் அவரவர் விரும்பும் கடவுளை வழிபடலாம். அதில் கட்சி எந்த வகையிலும் தலையிடாது. அதேநேரத்தில், பெரியாரின் பெண் கல்வி, பெண் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் கட்சி செயல்படும்”
காமராஜரின் மதச்சார்பின்மை, நேர்மையான நிர்வாகச் செயல்பாடு மற்றும் அம்பேத்கரின் வகுப்புவாதிப் பிரதிநிதித்துவ கோட்பாட்டை நிலைநிறுத்தவும் சாதிய ஒடுக்குமுறையை எதிர்ப்பதுமே நமது நோக்கம். வீரமங்கை வேலுநாச்சியாரும் தவெகவின் கொள்கை வழிகாட்டியாக திகழ்வார். பெண்களைக் கொள்கைத் தலைவராக ஏற்று வந்த முதல் கட்சி தவெக தான். முன்னேறத் துடிக்கும் சமூகத்தில் பிறந்து முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட அஞ்சலை அம்மாள் நமக்கு வழிகாட்டியாக இருப்பார். சொத்தை இழந்தாலும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அஞ்சலை அம்மாள்”
ஒரு கூட்டம் அரசியலுக்கு யார் வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை,-பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்,
பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியர், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி,
மேலும், “கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள்.
“2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,”
அறிவியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாறவேண்டுமா? அரசியலும் மாறவேண்டும். மேடைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேச வேண்டிய அவசியமில்லை. இப்போது என்ன பிரச்னை அதற்கு என்ன தீர்வு என்பதைச் சொன்னாலே மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடும், இன்று இருக்கும் தலைமுறையை புரிந்துகொண்டால்தான் சுலபமாக முன்னெடுத்துச் செல்லமுடியும் மற்ற அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசி நேரம் விரயம் செய்யப்போவதில்லை, ஆனால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கப் போவதில்லை.” இவ்வாறு அவர் பேசினார் .