தனுஷ் – ஐஸ்வர்யாவிட ம் நடந்த ரகசிய விசாரணை! விவாகரத்து வழக்கில் வரும் 27-ல் தீர்ப்பு!!
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 20 ஆண்டுகால திருமண உறவில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இரு குடும்பத்தினரும் இருவரையும் சமரசம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். தொடர்ந்து விவாகரத்திற்காக இருவரையும் தாக்கல் செய்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இரண்டு முறை விசாரணைக்கு வந்தபோதும், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா வழக்கில் ஆஜராகவில்லை.
இதனால், இருவரும் மீண்டும் இணையப்போகிறார்கள் என்றும் அடுத்த வருடம் ரஜினிக்கு ஒரு விழா நடக்கப்போகிறது என்றும், அதுவே இவர்கள் ஒன்று சேர்வதற்கான தொடக்க புள்ளியாக அமையப்போகிறது என்றும் தகவல்கள் வெளியானது.இதை உறுதி செய்யும் விதமாக, ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் வேட்டையன் படத்தை ஒரே திரையரங்கில் FDFS காட்சி பார்த்ததோடு, மாமனார் ரஜினிகாந்துக்கு தனுஷ் ‘வேட்டையன்’ பட வெற்றிக்கு வாழ்த்தும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷ் – ஐஸ்வர்யாவின் விவாகரத்து மனு விசாரணைக்கு வந்தது. இந்த முறையும் இருவரும் ஆஜர் ஆக மாட்டார்கள் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ஆஜரானார். இதற்கிடையே தனுஷ் வருவதற்கு தாமதம் ஆனதால் இவ்வழக்கின் மீதான விசாரணை 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில்,தனுஷ் 11:30 மணியளவில் நீதிமன்றத்திற்கு வந்தார்.இதையடுத்து தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் 12 மணிக்கு நீதிபதி முன் ஆஜராகினர்.
இருவரிடமும் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி விசாரணை நடத்தினார். நீதிமன்ற கதவுகள் மூடப்பட்டு இருவரிடமும் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டது.விசாரணையில் இருவருமே பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இவ்வழக்கின் தீர்ப்பு தேதியை வரும் 27ம் தேதிக்கு நீதிபதி சுபாதேவி ஒத்திவைத்து உத்தரவிட, தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.