சொர்க்க வாசல் படத்துக்கு செல்வராகவன் ஒரு தூண்!-இசையமைப்பாளர் அனிருத்.
அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சொர்க்கவாசல்’ படத்தில் ஆர். ஜே. பாலாஜி, இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன், எழுத்தாளர் ஷோபா சக்தி, மௌரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார். சர்வைவல் க்ரைம் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கின்றன. உலகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். ஆர். பிரபு மற்றும் எஸ். ஆர். பிரகாஷ் பாபு இணைந்து வழங்குகிறார்கள்.
வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தினை உலகம் முழுவதும் வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எஸ். ஆர். பிரபு , திங்க் ஸ்டுடியோஸ் சந்தோஷ், படத்தின் நாயகன் ஆர். ஜே. பாலாஜி, நாயகி சானியா ஐயப்பன், நடிகர் ஹக்கீம் ஷா, இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத், ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன், கதாசிரியர்கள் தமிழ் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இதர படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், “சொர்க்கவாசல் படத்தின் தயாரிப்பாளர்களான சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் எங்கள் குழுவுடன் பதினோரு ஆண்டுகளாக பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு திரைப்படம் தயாரிப்பதில் பெரு விருப்பம் உண்டு. அந்த வகையில் அவர்களுடைய ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸின் முதல் திரைப்படமாக சொர்க்கவாசலை தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் எனக்கு நெருக்கமான நண்பர்கள் தான். ஒளிப்பதிவு செய்திருக்கும் பிரின்ஸ் ஆண்டர்சன் மும்பையில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனின் மகனான சாண்டோவின் உதவியாளர். அவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகும் படம் இது. அற்புதமாக பணியாற்றியிருக்கிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது, அதற்காக மனதார வாழ்த்துகிறேன். எங்களுடைய குழுவில் ஒலி கலவை பொறுப்பினை பத்தாண்டுகளாக சிறப்பாக செய்து வரும் கலைஞர் வினய் ஸ்ரீதர் இதில் பணியாற்றி இருக்கிறார். இந்தப் படத்தின் தயாரிப்பில் இணைந்திருக்கும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் நன்றி. திரைப்படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் அவரர்களுடைய அனுபவத்தால் இந்த படத்தை உலகம் முழுவதும் சிறப்பாக வழங்குவார்கள். இதற்காக அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் பள்ளியில் எனக்கு இரண்டு வருட ஜூனியர். அந்தத் தருணத்தில் அவருக்கு சினிமாவில் ஆர்வம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. அதன் பிறகு ஒரு நாள் என்னை சந்தித்து திரைப்பட இயக்குநராக வேண்டும் என தெரிவித்தார். அதன் பிறகு ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, மூன்று திரைப்படங்களில் பணியாற்றி ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக விவரித்துவிட்டு, யார் நாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என என்னிடம் கேட்டார். நான் அப்போது இதற்கு என்னுடைய நண்பரான ஆர். ஜே. பாலாஜி தான் பொருத்தமானவராக இருப்பார் என்று மனதில் பட்டதை உடனே சொன்னேன். இந்த படத்தினை பார்த்து விட்டேன், என்னுடைய நண்பர்கள் அனைவரும் இணைந்து ஒரு தரமான படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள் என்று மகிழ்ந்தேன்.
நான் இசையமைப்பாளராக வாழ்க்கையை தொடங்கும் போது ஆர். ஜே. பாலாஜி பண்பலை வானொலியில் தொகுப்பாளராக புகழ்பெற்று இருந்தார். அப்போது அவருடன் பேசுவது எங்களுக்கெல்லாம் பெருமிதமாக இருக்கும். ஆர் ஜே வாக கலை உலக பயணத்தை தொடங்கி இன்று நடிகராக உயர்ந்திருக்கிறார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் கமர்ஷியலாக வெற்றி பெற்று இருக்கின்றன. அவர் நடிக்கும் படங்களுக்காக கடினமாக உழைப்பார். காமெடியனாக நடித்திருக்கிறார், கமர்ஷியலாக நடித்திருக்கிறார், ஆனால் இந்த திரைப்படத்தில் அவர் ஒரு அற்புதமான நடிகராக உருமாற்றம் பெற்றிருக்கிறார். செல்வராகவன் இந்தத் திரைப்படத்திற்கு ஒரு தூணாக இருக்கிறார். என்னுடைய கலை உலக பயணத்தையும், இசைப்பயணத்தையும் நேர்த்தியாக வடிவமைத்ததில் செல்வராகவனுக்கும் கணிசமான பங்கு உண்டு. இந்த படத்தில் இணைந்து பணியாற்றியதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரது வாழ்விலும் சொர்க்கவாசல் திறக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.