ஆண்டாள் கோவில் சர்ச்சை: நடந்தது என்ன? இளையராஜா பரபரப்பு தகவல்!
தமிழ்த்திரையுலகில் கடந்த 1976-ல் ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. இவர் 45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய இசையால் கட்டிப்போட்டு வைத்துள்ளார். தற்போது இளையராஜாவுக்கு வயது 80ஐ கடந்துவிட்டாலும் அவர் இன்றளவும் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறது. அவரது இசையில் தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 20ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த இளையராஜா அங்கு சென்று சாமி தரிசனமும் செய்திருந்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இளையராஜாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இளையராஜா,பெரிய பெருமாள் சன்னதி, நந்தவனம், ஆண்டாள் சன்னதி ஆகியவற்றிற்கு சென்று சாமி தரிசனம் செய்தார் . அப்போது ஆண்டாள் கோவில் கருவறைக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்ற இளையராஜாவை அங்குள்ள ஜீயர்களும், பக்தர்களும் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.வரவேற்பில் விதிமீறல் இருப்பதாக கூறி அங்கிருந்து அவர்கள் இளையராஜாவை வெளியேற்றியுள்ளனர். இதையடுத்து கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் நுழைந்தபோது அவர் தடுக்கப்பட்ட நிலையில், அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டவர்
![]()
சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு அங்குள்ள அர்ச்சகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, இதுதான் சனாதனம் எனவும் சாடி வருகின்றனர்.நேற்று திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்ய வந்த அம்மாவட்ட கலெக்டர் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இன்று அதே நிலை இசைஞானி இளையராஜாவுக்கு ஏற்பட்டு இருக்கிறது. அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்து இருக்கிறது. அர்த்த மண்டபத்திற்குள் உற்சவர் சிலைகள் இருப்பதால் ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை எனவும், இளையராஜாவை கட்டாயப்படுத்தவில்லை. ஜீயர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரே தான் வெளியே சென்றார் என கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது. மேலும் இளையராஜா விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையும் விளக்கம் அளித்தது. இளையராஜா அவமதிக்கப்படவே இல்லை எனவும், ஆண்டாள் கோவிலின் கருவறைக்கு அருகே அர்த்தமண்டபத்தில் அர்ச்சகர்கள், ஜீயர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும், விதிமுறைகள் படியே இளையராஜாவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.” என பதிவிட்டுள்ளார்.