கேம் சேஞ்சர் .( விமர்சனம்.) ஏமாற்றம் ! மாற்றம் வேண்டும் ஷங்கர் சார்.!

430 கோடி பட்ஜெட் படம் என்கிறார்கள்.ஆட்டம் பாட்டம் ,பைட் என கணக்கிட்டால் நிச்சயம் செலவு ஆகியிருக்கும். மலை ,சாலை என்றெல்லாம் பார்க்காமல் பெயிண்டு அடித்தவர் நம்ம இயக்குநர் சங்கர் . கேம் சேஞ்சர்  படத்தில் கதையை விட பிரமாண்டமே பெரிதாக இருக்கிறது.

ஷங்கரின் முந்தைய படங்களை கொலாஜ் பண்ணி முதல் பாகத்தை பில் அப் பண்ணியிருக்கிறார்கள் . ஆடல் பாடல் காட்சிகள் ,மாநாடு  கூட்டம் என கோடிகளை வாரி இரைத்திருப்பது தெரிகிறது.  தண்ணீர் ஆவியாகிவிடக்கூடாது என்பதற்காக ‘தெர்ம கோலை ‘ அணைக்கட்டில் பரப்பிய புத்திசாலித்தனம்தான் இருக்கிறது. செயற்கையான பிரமாண்டங்களை விட கதையில் மக்கள் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்கள் என்பதை இயக்குநர் உணர வேண்டும். 

ஐ ஏ எஸ் அதிகாரியைப் பற்றிய கதை. நேர்மையான அரசியல் ,ஆட்சி அதிகாரம் விரும்புகிறவர். இவர்க்கு எதிரி யாராக இருக்கமுடியும் அரசியல்வாதிகளை தவிர்த்து?காலம் காலமாக இருப்பதுதான்.! 

அப்பனை கொன்று விட்டு  சி. எம். ஆக நினைக்கிற சாமர்த்தியமிகு   இளைய மகன். மூத்தவன் மொன்னை .யாருக்கு ஆப்பு ?

இவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்று புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் நல்லவர். சமுத்திரக்கனி போன்ற நல்லவர்கள் சப்போர்ட் . ஆனால் அங்கேயும் சதி ,கொலை. 

இத்தகைய  ஒரு  கதையில் அஞ்சலியை வைத்து  அம்மா டிவிஸ்ட் . !காமடியன் சுனில் மாதிரி இவருக்கும் சைடு பார்வை,! என்ன ஷங்கர் சார். காளி என் ரத்னம் காலத்துப் பக்கம் காத்தடிக்கிது !வறட்சி !

கிளைமாக்ஸ் நெருக்கத்தில் வருகிற கலவரக்காரர்களை டிராக்டர் வைத்து தூக்குவது பக்கா அரசியல் . ஒன்றிய அரசு கோபம் கொள்ளலாம். 

ராம் சரண் -எஸ். ஜெ . சூர்யா இருவருக்கும் சரியான போட்டி . ஹீரோவுக்கான இடத்துக்கு மோசம் வந்து விடக்கூடாது என்று ராம் சரண் திறமையை மேம்படுத்திக்கொண்டிருக்கிறார். இவரைப் போலவே சூர்யாவும் வில்லனாக முத்திரை பதிக்க சைக்கோத் தனமாக கேரக்டரில் கவனம் செலுத்தி இருக்கிறார். இதைத்தான் விரும்புகிறார்களா ரசிகர்கள்? 

நாயகியாக கியாரா அத்வானி .

அண்ணன் ராமச்சந்தரா ரெட்டியாக ஜெயராம். அரசியல் ஜோக்கர் . யாரை குறி வைத்திருக்கிறதோ தெரியாது. 

இசை தமன் . ஆரவாரமான படத்துக்கு எதுக்கு மெல்லிசை என்று நினைத்திருக்கிறார். ஒளிப்பதிவு திரு.  இயக்குநர் ஷங்கரை காப்பாற்ற ரொம்பவும் பாடுபட்டிருக்கிறார்.

கேம் சேஞ்சர் -எதிர்பார்த்த அளவுக்கு இல்லை . ஷங்கர் காலத்துக்கு பிந்திய இயக்குநர்கள் சொல்லுகிற கதை எவ்வளவோ மேல் என்கிற எண்ணம் வந்திருக்கிறது,

—தேவிமணி