‘வுண்டர் பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ சார்பில், தனுஷ் தயாரித்து இயக்கியிருக்கும் படம், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இதில், பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த்தா ஷங்கர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ,ஆடுகளம் நரேன், உதய் மகேஷ், ஸ்ரீதேவி நடித்துள்ளனர்.
இசை, ஜிவி பிரகாஷ் குமார். ஒளிப்பதிவு, லியான் பிரிட்டோ.
செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) ‘AI’ யுகத்தின், காதலையும் அது தொடர்பான பிரச்சனைகளையும் சுவாரசியமாக பேசுகிறது , ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’.
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பது, நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாராயண். அவரிடம், தனுஷின் சிறுவயது தோற்றம் அப்படியே இருக்கிறது. ஓகே, கதைக்கு வருவோம்.
பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன் இருவரும் காதலர்கள். அனிகா சுரேந்திரனின் அப்பா, சரத்குமாரின் குறுக்கீடால் காதலர்களுக்குள் பிரிவு ஏற்படுகிறது. இதன் பிறகு, பவிஷ் நாராயணனுக்கும், பிரியா வாரியருக்கும் இரு வீட்டினரின் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனிடையே, அனிகா சுரேந்திரன் தன்னுடைய திருமணத்திற்கு பவிஷ் நாராயணனை அழைக்கிறார். இருவரும் சந்தித்து கொள்கிறார்கள். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதை, இளமை துள்ளும், ஆடல் பாடலுடன், சுவாரசியமான திரைக்கதை மூலம் சொல்லியிருப்பதே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.
நாயகன், பவிஷ் நாராயண். தனுஷின் மறு பிம்பமாகவே இருக்கிறார். அவரைப் போலவே இருப்பவர், உணர்வுகளை வெளிப்படுத்தி நடிப்பதிலும் கை தேர்ந்தவராகவே இருக்கிறார். காதலை வெளிப்படுத்தும் விதம், சந்தோஷம், துக்கம் என அனைத்தையும் சரியான விகிதத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
சாப்பாடு ராமி கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் அனிகா சுரேந்திரன். அவரது குழந்தைத்தனமான முகத்திற்கு ஏற்ற கதாபாத்திரம். க்ளைமாக்ஸ் காட்சியின் போது அசத்தல். காதலுக்கு ஏங்கித்தவிக்கும் காட்சியில் அபாரமான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பவிஷ் நாராயண் நண்பராக நடித்திருக்கும் மேத்யூ தாமஸ், திரைக்கதை கலகலப்பாக செல்வதற்கு பெரிதும் உதவியிருக்கிறார். அதே போல், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன் ஆகியோரின் பங்கும் திரைக்கதைக்கு உதவியிருக்கிறது.
ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான தோற்றத்தோடும், நடிப்போடும் அசத்தும் ஆர்.சரத்குமார், இந்தப்படத்திலும் அனிகா சுரேந்திரனின் அப்பாவாக நடித்து அசத்தியிருக்கிறார்.
சித்தார்தா ஷங்கர், ரம்யா ரங்கநாதன், பிரியா வாரியர், சரண்யா பொன்வண்ணன், உதய் மகேஷ், ஸ்ரீதேவி என அனைவருமே திரைக்கதையை நகர்த்திச் செல்வதில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி, தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை, சிறப்பு. காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் லியான் பிரிட்டோ, இளமையான நடிகர்களின் தோற்றத்தினை மேலும் இளமையாக்கியிருக்கிறார். கலர்ஃபுல்லான ஜாலியான படத்திற்கேற்ற ஒளிப்பதிவு.
அதேபோல், கலை இயக்குநர் ஜாக்கி, நடன இயக்குநர் பாபா பாஸ்கர், ஆடை வடிவமைப்பாளர் காவ்யா ஸ்ரீராம் ஆகியோர் படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
பிரசன்னா.ஜி.கே ,காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.
எழுதி, இயக்கியிருக்கும் நடிகர் தனுஷ், செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) ‘AI’ யுகத்தினரின் காதல் கதையை கலர்புல்லாகவும், கலககலப்பாகவும் சொல்லியிருக்கிறார். ஒரு இயக்குநரின் நேர்த்தி, வெற்றி என்பது கதாபாத்திரங்களை வடிவமைப்பதும், திரைக்கதையை சுவாரசியமாக கொண்டு செல்வதும் தான். அதில், தனுஷ் வெற்றி பெற்றிருக்கிறார்.
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ – ஆதாம் காலத்து (கதை) பாட்டு வரியில், இளைஞர்களின் கொண்டாட்டம்!