பிரதீப் ரங்கநாதன், பள்ளி படிப்பில் கெட்டி. பிளஸ் 2 வில், கோல்டு மெடல் வாங்கி பள்ளியிலேயே முதல் மாணவனாக வருகிறார். அப்போது அதே பள்ளியில் படிக்கும் மாணவியிடம் தனது காதலை சொல்ல, அதற்கு அந்தப்பெண் ‘உன்னை மாதிரி பழத்தை பிடிக்காது. ரக்கடான பையனத்தான் பிடிக்கும்.’ என்கிறார். அதனால், கல்லூரிப் படிப்பினை தொடரும் போது, பிரதீப் ரங்கநாதன் ரக்கடான பையனாக மாறுகிறார். கல்லூரியில் கெத்தாக ஒரு ‘டான்’ போல் வலம் வருகிறார். பெண்களும் அவர் பின்னே சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதனும் அதே கல்லூரியில் படிக்கும் அனுபமா பரமேஸ்வரனும் காதலிக்கின்றனர். கல்லூரி படிப்பு முடிந்த பின்னரும் பிரதீப் ரங்கநாதன் அதே மனநிலையோடு தறுதலையாக சுற்றி வருகிறார். அனுபமா பரமேஸ்வரன் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கின்றனர். தனது நிலையை எடுத்துக்கூறி பிரதீப் ரங்கநாதனை திருத்த முயற்சிக்கிறார். அதன் பிறகு இருவரும் பிரிகின்றனர்.
பிரதீப் ரங்கநாதன் போலியான சர்டிஃபிகேட் கொடுத்து வேலையில் சேருகிறார். பணம் கொட்டுகிறது. வீடு கார் பங்களா என செட்டிலாகிறார். இதன் பிறகு தொழிலதிபர் கே எஸ் ரவிகுமாரின் பெண் கயாடு லோகரை, பிரதீப் ரங்கநாதனுக்கு நிச்சயிக்கின்றனர். பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்கிறார்.
பிரதீப் ரங்கநாதன் படித்த கல்லூரியின் முதல்வர் மிஷ்கின், ஒரு நாள் எதேச்சையாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறார். ஆடிக்காருடன் அட்டகாசமாக இருக்கும் அவரை பார்த்தவுடன் அதிர்ச்சியாகிறார். 40 அரியர்ஸ் வைத்துக்கொண்டு டிகிரியே வாங்காதவர் இந்த நிலைக்கு எப்படி வந்தார். என்ற குழப்பத்துடன் மிஷ்கின் அவர் வேலை சேயும் அலுவலகத்திற்கு செல்கிறார். மிஷ்கினை பார்த்தவுடன் பிரதீப் ரங்கநாதன் அதிர்ச்சியடைகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் டிராகன் படத்தின், இளைஞர்களுக்கு புத்தி சொல்லும் கலகலப்பான கதை.
பிரதீப் ரங்கநாதன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கல்லூரியில் பொறுப்பற்றவராக சுற்றும் போதும், மிஷ்கினிடம் கெத்து காட்டும் போதும், அவருடைய காலில் விழுந்து கெஞ்சும் போதும் நன்றாகவே நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பு, தனுஷையும், எஸ் ஜே சூர்யாவையும் நினைவு படுத்துகிறது.
அனுபமா பரமேஸ்வரன், கல்லூரி மாணவியாக நடித்து இளைஞர்களை எளிதாக தன் பக்கம் இழுத்துக்கொள்கிறார். பிரதீப் ரங்கநாதனிடம் அவர் காட்டும் நெருக்கம், இடுப்பில் குத்தப்பட்டிருக்கும் டாட்டூவை காட்டும் காட்சிகளில், இளைஞர்களின் மனதில் தீப்பிடிக்கும். அதே போல் எமோஷனாலாக நடிக்கும் போதும், நன்றாக நடிக்கத்தெரிந்த நடிகை என்பதை உறுதி படுத்துகிறார்.
குறைவான காட்சிகளில் நடித்திருக்கும் காயடு லோஹர், கவர்ச்சி மற்றும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
விஜே சித்து, ஹர்ஷத் கான் இருவரும் திரைக்கதையை சோர்வடையாமல் பார்த்து கொள்கிறார்கள். இவர்களது காமெடிக் காட்சிகள் சிரிக்க வைக்கிறது.
கல்லூரி முதல்வராக நடித்திருக்கும் மிஷ்கின், கம்பீரம். அவரது தேர்ந்த நடிப்பு, சூப்பர். பொறுப்பான கல்லூரி முதல்வராக நடித்து இளைஞர்களுக்கு நல்ல, சிறந்த அறிவுரையை வழங்குகிறார்.
இயக்குநர் கெளதம் மேனன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பி.எல்.தேனப்பன் ஆகியோர் அலட்டலில்லாமல் நடித்திருக்கிறார்.
மரியம் ஜார்ஜ், இந்துமதி இருவரும் பாசமிக்க அப்பாவி பெற்றோராக நடித்திருக்கிறார்கள்.
லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு கச்சிதமாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு சிறப்பு!
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, அறிவுரை சொன்னாலும், அதை கல்லூரி அலப்பறைகளோடும், கலர்புல்லாகவும் சொல்லி இருக்கிறார். அதிகப்படியான குடிக்கும் காட்சிகளையும், சிகரெட் பிடிக்கும் காட்சிகளையும் குறைத்திருக்கலாம். அவ்வப்போது, தொய்வடையும் திரைக்கதையை சரி செய்திருக்கலாம்.
மற்றபடி, ‘டிராகன்’ கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சொல்லும் கலகலப்பான அறிவுரை.