கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 8 அத்தியாயங்களைக் கொண்ட ‘சுழல் 2’ – தி வோர்டெக்ஸ் தொடர், பிப்ரவரி 28 ஆம் தேதி பிரைம் வீடியோவில் வெளியிடப்படுகிறது.
‘சுழல் ’ – தி வோர்டெக்ஸ் முதல் சீசன் ரசிகர்களிடத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக, விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே வெற்றியை, ‘சுழல் 2 ’ – தி வோர்டெக்ஸ் பெறுமா? பார்க்கலாம்.
‘சுழல் 2’ – தி வோர்டெக்ஸ் ‘தொடரினை, ‘வால்வாட்சர் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது. புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதி, பிரம்மா மற்றும் சர்ஜுன் கேஎம் இயக்கியுள்ளனர். இதில், கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் லால், சரவணன், கௌரி கிஷன் (முத்து), சம்யுக்தா விஸ்வநாதன் (நாச்சி), மோனிஷா பிளெஸ்ஸி (முப்பி), ரினி (காந்தாரி), ஷ்ரிஷா (வீரா), அபிராமி போஸ் (செண்பகம்), நிகிலா சங்கர் (சந்தானம்) ஆகியோருடன் மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
பிரபல வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளுருமான செல்லப்பாவும் (லால்), சப் இன்ஸ்பெக்டர் சக்கரையின் அப்பாவும் நண்பர்கள். ஒரு நாள், சப் இன்ஸ்பெக்டர் சக்கரையின் (கதிர்) கைத் துப்பாக்கியால், அவரது தோழி நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்) ஒருவரை சுட்டுக்கொல்கிறார். இந்த வழக்கில், நந்தினிக்கு ஆதரவாக சமூக செயற்பாட்டாளர், வழக்கறிஞர் செல்லப்பா (லால்) ஆஜராகி வாதிடுகிறார். இறுதி வாதம் நிறைவு பெற்று, அனைவரும் தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
செல்லப்பாவின் ஊரான காளிப்பட்டணத்தில், வருடாந்திர ’அஷ்டகாளி’ விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த சமயத்தில் செல்லப்பா, கடற்கரை ஓரமிருக்கும் தனது வீட்டிற்கு சக்கரையை வருமாறு அழைப்பு விடுக்கிறார். அதனால், சக்கரை அங்கு செல்கிறார். அப்போது கதவு உள்பக்கம் பூட்டியிருக்கும் நிலையில், செல்லப்பா துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடைக்கிறார். சக்கரைக்கு கடும் அதிர்ச்சி. அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்கிறார். இன்ஸ்பெக்டர் சரவணன், கதவை உடைத்து, விசாரணையை மேற்கொள்கிறார். செல்லப்பா ஊரின் முக்கியமான நபர் என்பதால், போலீஸ் டிஎஸ்பி நேரடி விசாரணையை மேற்கொள்வதோடு, செல்லப்பாவின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பினை, சப் இன்ஸ்பெக்டர் சக்கரைக்கு கொடுக்கிறார். விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 8 இளம் பெண்கள், செல்லப்பாவை கொன்றது, நாங்கள் தான், எனக் கூறி தாங்களாகவே கைதாகிறார்கள். போலீஸூக்கு பெரும் குழப்பம். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘சுழல் 2’ – தி வோர்டெக்ஸ் வெப் சீரிஸின் பரபரப்பான ‘க்ரைம் டிராமா’ திரைக்கதை.
‘சுழல் 2’ – தி வோர்டெக்ஸ் தொடரில் மொத்தம் 8 பகுதிகள். ஒவ்வொன்றும் 40 முதல் 50 வரை நிமிடங்கள் இருக்கின்றன. முதல் பகுதி, அதாவது செல்லப்பாவின் மரணத்திலிருந்து அடுத்தடுத்து சில திருப்பங்களுடன், கொலையாளி யார் என்ற மர்மம் தொடர்கிறது. இவரா, அவரா? என யூகிப்பதற்குள் அடுத்த பகுதி வந்து விடுகிறது. ஒரு நல்ல, மர்ம நாவலின் முதல் பக்கம் கொடுக்கும் அதே த்ரில்லான அனுபவத்தினை இந்தத் தொடர் கொடுக்கிறது.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் குறை சொல்ல முடியாத நடிப்பினை கொடுத்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ், க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் சிறப்பு கவனம் பெறுகிறார்.
லால், வழக்கமான அதே நடிப்பினை கொடுத்திருக்கிறார்.
சரவணன், அலட்டலில்லாமல் நடித்து அசத்தியிருக்கிறார்.
கௌரி கிஷன், முத்து என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில், அதிகமான வசனங்கள் பேசாமலேயே நடித்திருக்கிறார்.
சம்யுக்தா விஸ்வநாதன் (நாச்சி), மோனிஷா பிளெஸ்ஸி (முப்பி), ரினி (காந்தாரி), ஷ்ரிஷா (வீரா), அபிராமி போஸ் (செண்பகம்), நிகிலா சங்கர் (சந்தானம்) உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்துள்ளனர். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் அனைவரும் கவனம் ஈர்க்கிறார்கள்.
கதை நகர்வுக்கு முக்கியகாரணமான மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து, அவர்களது கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். இதில் மஞ்சிமா மோகன் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்.
‘சுழல் 2’ – தி வோர்டெக்ஸ் தொடரில் மொத்தம் 8 பகுதிகள். இதில், 6 பகுதிகளே போதுமென்ற அளவிற்கு சில பகுதிகளில் தேவையற்ற காட்சிகள். மற்றும் விறுவிறுப்பில்லாத காட்சிகள் அயற்சியைத் தருகின்றன.இதை, இயக்குநர்கள் பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் ஆகியோர் கவனித்திருக்கலாம்.
மற்றபடி, ‘சுழல் 2’ – தி வோர்டெக்ஸ் ஒரு டீசன்ட்டான மர்மத்தொடர்!