சித்தரின் அருள், ஆசியோடு பிறந்தவர், (ஜீவா) அகத்தியா. எப்படியாவது, சினிமா ஆர்ட் டைரக்டராக ஆகிவிட வேண்டும், என்பது அவரது விருப்பம். இதன் காரணமாக, தயாரிப்பாளர் ஒருவருக்கு தன் சொந்த செலவிலேயே, பாண்டிச்சேரியில் ஒரு பெரிய, பழைய ப்ரெஞ்சு மாளிகையை ஷூட்டிங்கிற்கு ஏற்றபடி மாற்றுகிறார். அந்தப்படம் பாதியிலேயே தடை படுகிறது. அகத்தியா செலவு செய்த பணத்தை மீட்க, தனது (ராஷி கண்ணா) காதலி வீணா மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து (scary house) பயங்கரமான, மர்மமான பங்களாவாக மாற்றுகிறார். அந்த பங்களாவை நடிகர் யோகி பாபு திறந்து வைக்க, மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அகத்தியாவும் நண்பர்களும் உற்சாக மடைகின்றனர்.
ஒரு நாள் இளம் ஜோடி ஒன்று அந்த பங்களாவிற்குள் வருகிறது. அவர்களில் ஒருவர் காணாமல் போகிறார். நிஜமாகவே அமானுஷ்ய சக்திகள் இருப்பதை அகத்தியா உணருகிறார். அவரது காதலி வீணா பங்களாவை விட்டு வெளியேறலாம் என்கிறார். ஆனால் அகத்தியா, பங்களாவில் உள்ள மர்மங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறார். இதன் பிறகு, என்ன நடந்தது? என்பதே அகத்தியா.
எழுதி, இயக்கியிருக்கும் பா.விஜய், சித்த மருத்துவத்தின் மகத்துவத்தினை, மர்மம் கலந்த திகிலோடு, அகத்தியா படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார். பெரியவர்களுடன் சிறுவர், சிறுமிகளும் சேர்ந்து கண்டு களிக்கும் வகையில், ஆபாசங்களை தவிர்த்து ஜனரஞ்சகமான படத்தினை கொடுத்திருக்கிறார். இன்றைக்கும் பல நோய்களுக்கும் அருமருந்தாக விளங்குவது சித்த மருத்துவம் தான். அதை கருப்பொருளாக வைத்து, எல்லோரும் ரசிக்கும் வண்ணம் கொடுத்திருப்பதற்காக அகத்தியா படத்தை தயாரித்த ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ ஐசரி கணேஷையும், இயக்குநர் பா.விஜய்யையும் பாராட்டலாம்.
நாயகனாக ஜீவா. பங்களாவில் உள்ள மர்மத்தினை கண்டுபிடித்து, மறைத்து வைத்திருக்கப்பட்டிருக்கும் புற்று நோய்க்கான மருந்தினை, மீட்பதற்காக போராடும் இளைஞனாக, கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். இவரது அனிமேஷன் உருவமும் அதிரடி காட்டியிருக்கிறது.
நாயகியாக ராஷி கண்ணா. நாயகனின் காதலியாக வந்தாலும், எதுக்கு வந்தார். என்ன நடிச்சார்ன்னு அவருக்கும் தெரியலை. படம் பார்த்த நமக்கும் தெரியலை.
சித்த மருத்துவர் கதாபாத்திரத்தில் அர்ஜுன். பாராட்டும் படியான நடிப்புடன் படத்திற்கு பலமாக இருக்கிறார்.
வில்லனாக, எட்வர்ட் சோனென்ப்ளிக். அர்ஜூனின் காதலியாக மெட்டில்டா. இருவரும் திரைக்கதையில் முக்கிய கதாபாத்திரங்கலாக அதற்கேற்ற நடிப்பினை கொடுத்திருக்கிறார்கள்.
ரெடின் கிங்ஸ்லி, ஷாரா கோஷ்டி காமடி பண்ணி படம் பார்ப்பவர்களை கதற வைக்கிறார்கள். செந்தில், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் ஓகே.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது.
கலை இயக்குநர் பி.சண்முகத்தின் அரங்க வடிவமைப்பும் அதற்கு பயன் பட்டிருக்கும் பொருட்களும் பிரம்மாண்டமாக இருக்கின்றன. பிரெஞ்சு காலத்தில் பயன் படுத்தப்பட்டிருக்கும் பொருட்கள் அந்தக்காலகட்டத்தினை பிரதிபலிக்கிறது.
கலை இயக்குநர் பி.சண்முகத்தின் அரங்க வடிவமைப்பினை அழகாக, பிரமிக்கத்தக்க வகையில் படமாக்கி, கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி.
சித்த மருத்துவத்தின் நன்மைகள் மற்றும் பெருமைகளை பேசும் பா.விஜய், புற்று நோய்க்கு பயன்படுத்தப்பட்ட மருந்துக்கான மூலப்பொருட்களின் பெயரினை கூறி, தெளிவு படுத்தியிருக்கலாம். யானை, மூலிகை வேரினை பார்த்து அடங்குவது எல்லாம் அபத்தம். ஃபேண்டசியா இருந்தாலும், இன்றுவரை சித்தமருந்துகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்.
மொத்தத்தில், ‘அகத்தியா’ படத்தினை சிறுவர், சிறுமிகளுடன் கண்டு களிக்கலாம்.