மதுரையைச் சேர்ந்த புறநகர் பகுதியில், செல்வாக்குமிக்கவராக இருந்து வருபவர், மாருதி பிரகாஷ் ராஜ். இவரையும், இவரது மகன் சுராஜ் வெஞ்சரமூடுவையும், போலீஸ் எஸ். பி, எஸ். ஜே. சூர்யா, என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார். இந்த விஷயம், மாருதி பிரகாஷ்ராஜூக்கு தெரிய வருகிறது. அதனால், மளிகை கடை நடத்தி வரும் விக்ரமிடம் உதவி கேட்கிறார். விக்ரம் உதவி செய்ய முன் வருகிறார். ஆனால், விக்ரமின் மனைவியான துஷாரா விஜயன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். மனைவிக்கு தெரியாமல் விக்ரம் களமிறங்கிறார். இதன் பிறகு, என்ன நடந்தது? என்பது தான், வீர தீர சூரன் 2 படத்தின் மீதிக்கதை!
ஊரே திருவிழா கொண்ட்டாட்டத்தில் திளைத்திருக்க, போலீஸிடமிருந்து உயிர் பிழைக்க ஓடும் மாருதி பிரகாஷ் ராஜ், சுராஜ் வெஞ்சரமூடு இவர்களின் இதயம் படபடப்பதை போன்று, படம் பார்த்து கொண்டிருப்பவர்களின் இதயமும் படபடக்கிறது. இது, படம் ஆரம்பித்தவுடனேயே தொற்றிக்கொள்கிறது. இந்த படபடப்பு, விக்ரம் திரையில் தோன்றிய பிறகு மேலும் அதிகரிக்கிறது. இது க்ளைமாக்ஸ் வரை நீடிக்கிறது.
மளிகை கடை நடத்தி வரும் விக்ரம், மனைவியுடன் ரொமேன்ஸ், பிள்ளைகளுடன் விளையாட்டு என ஒரு புறமும், அரைக்கால் டவுசருடன் போலீஸ் நிலையத்தில் புகுந்து, துப்பாக்கியில் சுட்டு வீழ்த்தும் போதும் மாறுபட்ட நடிப்பினை கொடுத்து மாஸ் காட்டுகிறார். ‘‘டேய்’ ன்னு சொல்லாத சுட்டுடுவாங்க’ என சொல்லியபடி அசால்ட்டாக நடந்து செல்லும் காட்சியில், தியேட்டரில் விசில் பறக்கிறது. அதே போல் சுராஜ் வெஞ்சரமூடுவிடம் மாட்டிக்கொண்டு திணறுமிடத்திலும், துஷாரா விஜயனுடன் சல்லாபிக்கும் போதும் சூப்பராக நடித்திருக்கிறார். இப்படி, காதல் சேட்டை, பயம், கோபம், தவிப்பு என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தி ரசிகர்களை எளிதில் ஈர்த்துவிடுகிறார்.
விக்ரமின் மனைவியாக நடித்திருக்கும் துஷாரா விஜயன், காலகாலமாக மளிகை கடை நடத்தும் பெண்மணியாகவே மாறிப்போயிருக்கிறார். விக்ரமிடம் சண்டையிட்டபடியே வியாபாரம் செய்யும் காட்சி சூப்பர். அதேபோல், க்ளைமாக்ஸில் சண்டைக்கு சீறிச்செல்லும் காட்சியிலும் சூப்பராக நடித்திருக்கிறார். கடையிலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் இவரும், விக்ரமும் செய்யும் காதல் சேட்டைகள் ரசிக்கத்தகுந்தவை!
போலீஸ் எஸ்.பியாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, அளவான நடிப்பின் மூலம் அமர்க்களப் படுத்தியிருக்கிறார்.
பெரியவராக நடித்திருக்கும் மாருதி பிரகாஷ் ராஜ், அவரது மகனாக நடித்திருக்கும் சுராஜ் வெஞ்சரமூடு இருவரும் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார். பாலாஜி, ரமேஷ் இந்திரா, மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார், தனது பின்னணி இசை மூலம் காட்சிகளில் இருக்கும் பதற்றத்தினை மேலும் அதிகரித்திருக்கிறார். பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, காட்சிகளை நேர்த்தியாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறது.
சண்டைப்பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவின் சண்டைக்காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது.
இயக்குநர் எஸ்.யு.அருண் குமார், முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை விறுவிறுப்பாகவும், யூகிக்க முடியாதபடி காட்சிகளை நகர்த்தி, படம் பார்ப்பவர்களை சீட்டின் விளிம்பில் உட்காரவைத்து விடுகிறார். சாதரண மளிகைக் கடைக்காரரான காளியின் (விக்ரம்) ஃப்ளாஷ் பேக் காட்சிகள், மிரட்டலாக இருக்கிறது.
ஆங்காங்க சில குறைகள் இருந்த போதும், இயக்குநர் எஸ்.யு.அருண் குமார், விறுவிறுப்பான திரைக்கதையில், ‘வீர தீர சூரன்’ படத்தை ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார்