விளையாட்டு ஆக்ஷன் படமாக உருவாகி வரும் “மண்டாடி”.!
‘ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட்’ எல்ரெட் குமார் பட நிறுவனத்தின் 16வது தயாரிப்பாக உருவாகும் புதிய படம், “மண்டாடி”..ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்கிறார்.. இப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார், கதா நாயகியாக மஹிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இவர்களுடன் சத்யராஜ், ரவீந்திரா விஜய், அசுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் நடிக்கின்றனர் “செல்ஃபி” படத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, இப்படத்தை எழுதி இயக்குகிறார். இப்படம் குறித்து இயக்குநர் மதிமாறன் புகழேந்தி கூறியதாவது:“ காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வரத்தையும் அவற்றின் திசைவழிப் போக்கையும் பற்றிய நல்ல அறிவையும் அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்கச் செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். அவரையே இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் ‘மண்டாடி’ என்று அழைக்கின்றனர்.
காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள சூரியின் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அவருக்கென்று எழுதப்பட்ட இந்த ‘மண்டாடி’ கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது. ‘மண்டாடி’ திரைப்படம் அவருடைய நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கியமான படியாக அமையும். மேலும் இந்த கதையில் வரும் கதாபாத்திரத்திற்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது. கூடவே ஒரு நடிகரின் உடல் மற்றும் மன வலிமையும் அதிகம் தேவைப்பட்டது — அதை சூரி போன்றவர்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.
இயக்குனர் வெற்றிமாறன், படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூசராக இருப்பது எனக்கு ஒரு ஊக்கமும் வழிகாட்டுதலுமாக இருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையும், எஸ்.ஆர். கதிர் அவர்களின் ஒளிப்பதிவும் சேர்ந்து, உண்மையான உணர்வுகளைத் தரும் விளையாட்டு ஆக்ஷன் படமாக உருவாகிக்கொண்டு வருகிறது.”என்கிறார்.