‘லெவன்’ Eleven (விமர்சனம்) கேலி வதை செய்பவர்களுக்கான எச்சரிக்கை!

நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ஆடுகளம் நரேன், ரவிவர்மா , அர்ஜய் உள்ளிட்ட பலரது நடிப்பினில், லோகேஷ் அஜ்ல்ஸ் எழுதி, இயக்கியிருக்கும் படம் லெவென். இப்படத்திற்கு  டி.இமான் இசை அமைத்துள்ளார். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். என் பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். ‘ஏ ஆர் என்டர்டைன்மென்ட்’ சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி ஆகியோர்  தயாரித்துள்ளனர்.

ஒரு உருவம், பிணத்தை இழுத்துக்கொண்டு செல்லும், திகில் காட்சியுடன் ‘லெவன்’ படத்தின் ஆரம்பக் காட்சி துவங்குகிறது. அதன் பிறகு தொடர்ச்சியாக, மர்மமான முறையில் பலர் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் பிணங்கள் கண்டெடுக்கப்படுகிறது. பிணத்தை, போலீஸ் கைப்பற்றி விசாரணை செய்துவரும் நிலையில், அடுத்த கொலை நடக்கிறது. போலீஸுக்கு பெரும் தலைவலியை கொடுக்கும் இந்த வழக்கு, குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் தேர்ச்சிப்பெற்ற, திறமையான  போலீஸ் இன்ஸ்பெக்டர், நவீன் சந்திராவிடம் கொடுக்கப்படுகிறது. அவர் குற்றவாளியைக் கண்டுபிடித்தாரா, இல்லையா? கொலைகளுக்கான காரணம் என்ன? என்பது தான், லெவன் படத்தின் கதை.

படம் ஆரம்பித்ததிலிருந்து இறுதிவரை, ஒரு சில காட்சிகளை யூகிக்க முடிந்தாலும், பல காட்சிகளை யூகிக்க முடியவில்லை. இறுதியில், கொலையாளி யார்? என்று தெரியவரும்போது சபாஷ்! நல்ல திரைக்கதை, என்று சொல்ல வைக்கிறது. ஆனால், இன்னும் கொஞ்சம் சுவாரசியப் படுத்தியிருக்கலாம், என்றும் தோன்றுகிறது. காட்சிப்படுத்தலில் கொஞ்சம் தவறியிருக்கிறார், இயக்குநர். ஆனால், ஒரு கிரைம் டிராமவிற்கு என்ன தேவையோ, அந்த அனைத்தும் இருக்கிறது. ஆக, இது ஒரு ஆவெரேஜான படம்!

போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நவீன் சந்திரா, அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை, மிகச்சரியாக கொடுத்திருக்கிறார். உயரதிகாரியை காப்பாற்றும் போதும், சப் இன்ஸ்பெக்டருக்கு உடலுறுப்பு தானம் செய்யும்போதும் அந்த கதாபாத்திரத்தின் மீதான மதிப்பினை உயர்த்திக்காட்டுகிறது! அதேபோல் அபிராமியை தாயாக பாவிக்கும் போதும் சரியான உடல்மொழி நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அபிராமி பள்ளியின் முதல்வராகவும், சிறுவர்களை பராமரிக்கும் தாயாகவும், மிக நேர்த்தியான நடிப்பினை கொடுத்திருக்கிறார். இவர் நடித்த காட்சிகள் படத்தின் பலமாக இருக்கிறது.

மற்றபடி, படத்தில் நடித்திருந்த ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ஆடுகளம் நரேன், ரவிவர்மா , அர்ஜய் ஆகியோரும் சிறப்பாகவே நடித்திருந்தனர்.

‘மாணவன் பெஞ்சமின்’ கதாபாத்திரத்தின்  வழியாக, இன்றும் பள்ளி, கல்லூரில் நடந்து வரும் (Ragging) கேலி வதை செய்பவர்களுக்கான எச்சரிக்கை, மற்றும் அப்படி நடந்து கொள்பவர்கள், தங்களை திருத்திக்கொள்ளும் விதமாக இந்தப்படம் அமைந்திருக்கிறது.

மற்றபடி ,  ‘லெவன்’ பார்க்கலாம்….! என்ற வகையிலான  ஒரு கிரைம் டிராமா!