மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.இதில், இயக்குநர் அன்பு, சசிகுமார், ஏ. ஆர் முருகதாஸ், கஸ்தூரி ராஜா, பிரேமலாதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது,” சண்முக பாண்டியனை இனிமேல் தமிழ்நாட்டு மக்களிடமும் , சினிமா துறை சார்ந்தவர்களிடமும் ஒப்படைக்கிறேன். விஜயகாந்த் அரசியல் மற்றும் சினிமா என இரண்டிலும் பயணித்தவர் . அவரின் வழியிலேயே எனது இரு மகன்களும் செல்கிறார்கள். இவர்கள் இருவரும் பிறந்த போதே இதை முடிவு செய்து விட் டோம். நிச்சயம் கேப்டனின் இலக்குகளை எனது இரு மகன்களும் நிறைவேற்றுவார்கள். ‘கள்ளழகர்’ படத்தில் நடித்த போது கேப்டன் யானையோடு நெருக்கமாக பழகி, வீட்டிற்கு யானையை அழைத்து வரவா என்று கேட்டார், அவ்வளவு பெரிய வீடு இல்லையே என்று கூறினேன்..
அதேபோன்றுதான் சண்முக பாண்டியனும் தற்போது அவருடன் நடித்த ‘மணியன் ‘ யானையை வீட்டிற்கு அழைத்து வர கேட்டார். இருவரும் யானை வளர்க்கவே விரும்புகின்றனர். நிச்சயம் ஒரு யானையை வளர்ப்போம்..கேப்டனின் இடத்தை எனது இரண்டு மகன்களும் நிரப்புவார்கள். விஜய பிரபாகரன் அரசியலிலும், சண்முக பாண்டியன் சினிமாவிலும் தங்களை நிலைநிறுத்துக்கொள்வார்கள். அதில் எந்த ஐயமும் இல்லை” இவ்வாறு அவர் பேசினார்
நிகழ்வில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசும்போது, “ரமணா திரைப்படத்திற்கு முன்பிருந்தே கேப்டனை எனக்கு தெரியும். ரசிகனாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை 50, 60 முறை திரையரங்கில் பார்த்திருப்பேன். என்னுடைய படங்களில் வில்லன்கள் எல்லாம் அழகாக இருப்பதாக கூறுவார்கள். ஏராளமான படங்களில் நடிகருக்கு நிகராக வில்லன்கள் அழகாக இருக்கும் டிரெண்டை ஆரம்பித்து வைத்தவர் விஜயகாந்த் தான்.
அதற்கென ஒரு பெரிய நம்பிக்கை வேண்டும். நான் வசனகர்த்தா கலைமணியிடம் உதவியாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ‘கருப்பு நிலா’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். அங்கே தான் கேப்டனை முதல் முதலாக நேரில் பார்த்தேன். படப்பிடிப்பு நான் ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்தேன். எனக்கு ஒரு கிளாஸ் கொடுத்தார்கள். நான் அது மோராக இருக்குமென்று நினைத்து குடித்தேன்.
கிளாஸில் இருந்தது ஹார்லிக்ஸ் என குடித்த பிறகுதான் தெரிந்தது. நம்மைப் போன்ற ஒரு அசிஸ்டன்டுக்கு ஹார்லிக்ஸ் கொடுப்பார்களா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். தவறாக கொடுத்து விட்டார்களோ என நினைத்தேன். அப்போது தான் பார்த்தால் அங்கே ஒரு அடுப்பில் பெரிய பாத்திரத்தில் ஹார்லிக்ஸ் உடைத்து கொட்டிக் கொண்டிருந்தார்கள். இதைப் பற்றி நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், நான் அதை நேரில் பார்த்திருக்கிறேன். கேப்டன் இருக்கும் செட்டில் அனைவருக்கும் ஹார்லிக்ஸ், இளநீர் கொடுப்பார்கள். என்னுடைய திருமணத்திற்கு வந்து அதனை வரலாற்று சிறப்புமிக்க சம்பவமாக மாற்றிவிட்டார் விஜயகாந்த். ஏனென்றால் விஜயகாந்துடன் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் உடன் வந்தார்கள். அது அவருக்காக கூடிய கூட்டம் அது.
எல்லோரும் விஜயகாந்த் குறித்துப் பேசி இருப்பார்கள். ஆனால் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் மட்டும்தான் விஜயகாந்த் உடன் பணியாற்றியுள்ளேன் என்று நினைத்தேன். ஆனால் கஸ்தூரி ராஜாவும் பணியாற்றியதாகக் கூறியபோது சற்று பொறாமையாக இருக்கிறது.விஜயகாந்தின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் சண்முக பாண்டியனுக்கும் இருக்க வேண்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக உங்களைக் கைவிட மாட்டார்கள். இவ்வளவு கம்பீரமான நடிகர் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளார். விஜயகாந்தின் இரு கண்கள் அப்படியே சண்முக பாண்டியனுக்கு உள்ளது. சினிமாவில் வளர்ந்து வாருங்கள். கண்டிப்பாக ரமணா 2 படம் எடுக்கலாம். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் சசிகுமார் பேசியதாவது, “விஜயகாந்த் சார் எங்கள் மண்ணின் மைந்தன் , அவரை இயக்கும் ஆசை எனக்கு நிறைவேறாமல் போனது, ஆனால் சண்முக பாண்டியனை இயக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. குற்றப்பரம்பரை நாவலை வெப் சீரிஸாக எடுக்கும்போது அதில் ஒரு கதாபாத்திரம் அவர் தான் நடித்தார். அவர் தான் நடிக்க முடியும்.
அவ்வளவு உயரமாக கட்டுமஸ்தாக கருப்பாக ஒரு கதாநாயகன் தமிழ் சினிமாவில் இல்லை. முதன்முதலாக அந்த கதாபாத்திரத்திற்காக போட்டோஷூட் செய்த போது ஒரு ஷூட்டில் அவரது கண்ணைப் பார்த்து மிரண்டு விட்டேன், அப்படியே கேப்டனின் கண்கள். கண்டிப்பாகச் சண்முக பாண்டியனை மீண்டும் இயக்குவேன்.
குற்றப்பரம்பரை எப்போது மீண்டும் எடுக்கப்பட்டாலும் அந்த கதாபாத்திரத்தில் சண்முக பாண்டியன் தான் நடிப்ப்பார். இந்தப் படை தலைவன் நிச்சயம் பெரிய வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார் .

நாயகன் சண்முக பாண்டியன் பேசியதாவது.”இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம், காரணம் அப்பா இருக்கும்போது இந்த படத்தின் கதையை கேட்டிருந்தார்.என்னுடைய முதல் ஷாட்டே ஐந்து யானைகளுடன் தான் இந்த படத்தில் இருக்கும் இரண்டு சண்டைக் காட்சிகளையும் அப்பா பார்த்திருக்கிறார். எனவே இந்த படம் எனக்கு மிக மிக நெருக்கமான படம்.இப்படத்தை கும்கி அல்லது வேறு எந்த படத்துடனும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. இந்த படம் முற்றிலும் வேற மாதிரியான கதைகளத்தை கொண்டுள்ளது.இந்த படத்தின் மூலம் பல விஷயங்களை நானும் இயக்குநர் அன்பும் கற்றுக்கொண்டோம். பல்வேறு தடைகள் இந்த படத்துக்கு இருந்தன. அதையும் மீறிவரும் மே 23ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. இது குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய படமாக இருக்கும்.இங்கே பேசிய இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் “ரமணா 2 படத்தில் என்னை நடிக்க வைப்பதாக கூறியதற்கு மிகவும் நன்றி. அப்பாவின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் ரமணா, இவ்வாறு அவர் பேசினார்












