‘ஏஸ்’ (ACE) – விமர்சனம்!

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் இயக்குநர் ஆறுமுக குமார், தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம், ‘ஏஸ்.’ இதில் நாயகன், நயகியாக விஜய் சேதுபதி , ருக்மணி வசந்த் நடித்திருக்க, அவர்களுடன் யோகி பாபு, திவ்யா பிள்ளை, பப்லு பிருத்விராஜ், பி.எஸ். அவினாஷ், ராஜ் குமார் நடித்துள்ளனர்.
இந்திய சிறையிலிருந்து வெளியாகும் விஜய் சேதுபதி, மலேஷியாவிற்கு சென்று தனது வாழ்க்கையை தொடங்க நினைக்கிறார். அவரை, (யோகி பாபு) அறிவுக்கரசன், இந்தியாவிலிருந்து தன்னுடைய உறவினரான ‘போல்ட் கண்ணன்’ என நினைத்து தன்னுடன் அழைத்துச் செல்கிறார். அதோடு, (திவ்யா பிள்ளை) கல்பனா நடத்தி வரும் உணவகத்திலேயே வேலைக்கும் சேர்த்து விட்டு, அங்கேயே தங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்கிறார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும்( ருக்மணி வசந்த்) ருக்மணி என்பவருடன் (விஜய் சேதுபதி) போல்ட் கண்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக உருவாகிறது. இந்நிலையில், தன்னுடைய வேலையை நிரந்தரமாக்கிக் கொள்ள பணம் கொடுப்பதாக (திவ்யா பிள்ளை) கல்பனாவிடம் உறுதியளிக்கிறார். இதற்காக, (விஜய் சேதுபதி) போல்ட் கண்ணன் (பி.எஸ். அவினாஷ்) கந்து வட்டி தாதா தர்மாவிடம் பணம் கேட்கச்செல்கிறார். அப்போது (Poker) ‘போக்கர்’ எனும் ஒரு வகையான சீட்டாடத்தில், கோடிக்கணக்கில் பணத்தை இழக்கிறார். அந்த பணத்தை ஒரே வாரத்தில் பணத்தை கொடுக்க கந்து வட்டி கும்பல் கெடு விதிக்கிறது. இதன் பிறகு என்ன நடக்கிறது? என்பது தான், ‘ஏஸ்’ படத்தின் கதை.
விஜய் சேதுபதி, ‘போல்ட் கண்ணன்’ என்ற கதாபாத்திரத்தை தனக்கே உரிய ஸ்டைலில், இலகுவாக கையாண்டிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும், ருக்மணி வசந்துடனான காதல் காட்சிகளிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுகிறார்.
ருக்மணி வசந்த், தோற்றத்திலும் நடிப்பிலும் கவருகிறார்.
மலேஷியத் தொழிலதிபர் அறிவுக்கரசன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவருடைய டைமிங் பஞ்ச் டைலாக்குகள் ரசிக்கும்படி இருக்கிறது.
கந்து வட்டி தாதா ‘தர்மா’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பி எஸ் அவினாஷ், தனது வழக்கமான வில்லத்தனத்தினை காட்டியிருக்கிறார். திவ்யா பிள்ளை, பப்லு பிருத்விராஜ், ராஜ் குமார் ஆகியோரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி, நடித்திருக்கிறார்கள்.
படத்தின் பலமாகவும், கவரும் அம்சமாகவும் இருப்பது ஒளிப்பதிவாளர் கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவு. மலேஷியாவை எந்தப்படத்திலும் இதுவரை பார்த்திராத, ஒரு கோணத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகர் இசையில், பாடல்கள் ஓகே! சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசையில், காட்சிகள் கூடுதல் பலம் பெறுகிறது.
ஃபென்னி ஆலிவர், தொய்வான காட்சிகளை தவிர்த்து, படத்தின் நீளத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம், குறிப்பாக இரண்டாம் பாதியில் ஏற்படும் தொய்வினை சரிப்படுத்தியிருக்கலாம்.
விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் தெளிவின்மை படத்தின் பலவீனம். எழுதி இயக்கியிருக்கும் ஆறுமுககுமார், ஒரு சுமாரான கதையினை, திரைக்கதை மூலம் சுவாரசியப் படுத்தியிருக்கிறார். க்ளைமாக்ஸ், குறிப்பிடும்படி இருக்கிறது.
ஏஸ் – ரசிக்கக்கூடிய, ஒரு ஆவரேஜான படம்!