‘வேம்பு’ – விமர்சனம்!

நாயகன், நாயகியாக ஹரிகிருஷ்ணன், ஷீலா ஆகியோர் நடித்து, மாரிமுத்து, ஜெயராவ், ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்துள்ள படம், வேம்பு. இந்தப்படத்தினை, ‘மஞ்சள் சினிமாஸ்’ சார்பில், கோல்டன் சுரேஷ் மற்றும் விஜயலட்சுமி தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியிருக்கிறார். மணிகண்டன் முரளி இசை அமைத்துள்ளார். குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘வேம்பு’
பொருளாதாரத்தில் பின் தங்கிய, பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாத ஒரு ஊரில், ஷீலா தனது அம்மா, அப்பாவுடன் வசித்து வருகிறார். பள்ளிப் படிப்பினை தொடரும் அவருக்கு சிலம்பக்கலை மீது அதிக ஈடுபாடு. ஷீலாவின் அப்பா, ஊரார் பேச்சினை மீறி அவரது சிலம்பக்கலை ஆசைக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் ஷீலாவின் அப்பாவிற்கு ஊர்க்காரர்களின் பேச்சை மீறமுடியவில்லை. ஆதலால் ஷீலாவின் முறைமாமன் ஹரிகிருஷ்ணனை திருமணம் செய்து வைக்கிறார். இதன்பிறகு ஷீலாவின் சிலம்பக் கனவு என்ன ஆனது? என்பது தான், வேம்பு படத்தில் கதை.
‘வேம்பு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷீலா அந்தக் கதாபாத்திரத்தில் குறைவில்லாமல் நடித்திருக்கிறார். பாவாடை தாவணியில் பள்ளிக்குச்செல்லும் பெண்ணாகவும், திருமணம் முடிந்து குடும்பப் பொறுப்பினை ஏற்கும் பெண்ணாகவும் சிறப்பான நடிப்பினைக் கொடுத்திருக்கிறார். இவரது கதாபாத்திரத்தின் வழியாக, ஒரு பெண்ணுக்கு கல்வியும், தற்காப்பும் எவ்வளவு அவசியம் என்பதை, இயக்குநர் ஜஸ்டின் பிரபு சிறப்பாக எடுத்துக் கூறியிருக்கிறார்.
வெற்றி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹரிகிருஷ்ணன், குறை சொல்ல முடியாத நடிப்பினை கொடுத்திருக்கிறார். பார்வையற்றவராக வரும் காட்சிகளில், மிகையான நடிப்பினை கொடுத்திருக்கிறார். அதை தவிர்த்திருக்கலாம்.
ஷீலாவின் அம்மா, அப்பாவாக நடித்திருப்பவர்கள், ஹரிகிருஷ்ணனின் அம்மாவாக நடித்திருப்பவர், செங்கல் சூலை முதலாளி, எம். எல். ஏ. மாரிமுத்து உள்ளிட்ட படத்தில் நடித்தவர்கள், அந்த கிராமத்தினரைப் போலவே நடித்திருக்கிறார்கள்.
மணிகண்டன் முரளியின் இசையும், குமரனின் ஒளிப்பதிவும் பெரிதாக ஓகே எனும் சொல்லுமளவிற்கு இருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு, வேம்பு படத்தின் மூலம் பெண்களின் முன்னேற்றம் குறித்தும், அவர்களின் பாதுகாப்பு குறித்தும் பேசியிருக்கிறார். சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு அவர்களிடமே இருக்கிறது. இன்றைய சூழலில், ஒவ்வொரு பெண்ணும் அவர்களுக்கான பாதுகாப்பினை, அவர்கள் தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு தற்காப்பு அவசியம். என்ற ஒரு கருத்தை வலியுறுத்தி, வேம்புவை போல் ஒவ்வொரு பெண்ணையும் சாதிக்கத்தூண்டியிருக்கிறார்
வேம்பு – சாதணைப் பெண்!