‘ஓ பி ஆர் பி புரொடக்ஷன்ஸ்’ சார்பில், தயாரிப்பாளர் ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்திருக்கும் படம், ‘கட்ஸ்’. இத்திரைப்படத்தில், ரங்கராஜ் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்திருப்பதுடன், எழுதி இயக்கியிருக்கிறார். அவருடன் ஸ்ருதி நாராயணன், நான்ஸி, ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் ஒளிப்பதிவு செய்திருக்க, ஜோஸ் பிராங்களின் இசையமைத்திருக்கிறார்.
நாயகன் ரங்கராஜ் சிறுவயதிலேயே அம்மா, அப்பா இருவரையும் இழந்த நிலையில், ஆசிரமத்தின் உதவியால் வளர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியில் அமர்கிறார். மனைவி, குழந்தை என சந்தோஷமாக செல்லும் அவரது வாழ்க்கை, தொழிலதிபர் ஒருவரால் திசை மாறுகிறது. அதாவது, சட்ட விரோதமாக செயல்படும் தொழிலதிபரை கைது செய்கிறார். இதன் காரணமாக, தொழிலதிபருடன் நடக்கும் மோதலில், அவரது மனைவி கொல்லப்படுகிறார். இதற்கு பழிவாங்க, தொழிலதிபரைத்தேடி ரங்கராஜ் செல்கிறார். அப்போது, தான், அநாதையானதற்கு காரணமே தொழிலதிபர் எனத் தெரிவருகிறது. இதன் பிறகு ரங்கராஜ் என்ன செய்தார்? என்பது தான், கட்ஸ் படத்தின் மீதிக்கதை.
இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ரங்கராஜ், கதை எழுதி இயக்கியிருக்கிறார். வழக்கமான பழி வாங்கும் கதை. அதில் விவசாயம், சமுதாய ஏற்றத்தாழ்வு, சமுதாய சீர்கேடு, காதல் என அனைத்தையும் ஒரே படத்தில் சொல்ல முனைந்ததால், திரைக்கதை சுவாரசியமற்று இருக்கிறது. மேலும் பல படங்களில் பார்த்து, அலுத்துப்போன காட்சியமைப்புகள், யூகிக்கக் கூடிய காட்சிகள் இருப்பதால் ரசிக்க முடியவில்லை.
நடிப்பினை பொறுத்தவரை படத்தின் நாயகன் ரங்கராஜ், விவசாயி பெத்தண்ணா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். போதுமான பயிற்சியின்றி நடித்தைப்போல் இருக்கிறது. ஆனால், அவரது தோற்றம் வசீகரமாக இருக்கிறது. நடிப்புப் பயிற்சி பெற்றால், கவனம் பெறும் கதாநாயகனாக ஜொலிப்பார்.
நாயகன் ரங்கராஜூக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்ருதி நாராயணன், நான்ஸி இருவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். அவர்களில், கிராமத்து பெண்ணாக ஸ்ருதி நாராயணனும், நகரத்து பெண்ணாக நான்ஸியும் கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்துள்ளனர். அதிலும், நான்ஸி இளைஞர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்.
இவர்களைத்தவிர நாயகனின் தாய் மாமனாக நடித்திருக்கும் சாய் தீனா, மூத்த காவலராக நடித்திருக்கும் டெல்லி கணேஷ், பிர்லா போஸ், ஸ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மனோஜின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின் இசையும் பரவாயில்லை!
மொத்தத்தில், ஒரு பழிவாங்கும் கதையினை விறுவிறுப்பாக கொடுப்பதற்கு பதில், விறுவிறுப்பில்லாமல் கொடுத்துள்ளனர்.
‘கட்ஸ்’ – அமெச்சூர் அட்டெம்ப்ட்!