‘3 BHK’ – விமர்சனம்!

சரத்குமார் ,தேவயானி, சித்தார்த் மீதா ரகுநாத் ,யோகி பாபு , சைத்ரா உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘3 BHK’. ‘எட்டு தோட்டாக்கள்’ திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக, தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த, இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், ‘மாவீரன்’ எனும் வெற்றி படத்தை தயாரித்த, ‘சாந்தி டாக்கீஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் விஷ்வா தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை காண்போம்.

சென்னையில் வாசுதேவன்( சரத்குமார் ) – சாந்தி ( தேவயானி) தம்பதியினர் பிரபு( சித்தார்த் ) மற்றும் ஆர்த்தி ( மீதா ரகுநாத் ) ஆகிய இரு வாரிசுகளுடன்  நடுத்தர வர்க்கத்து வாழ்க்கையை வாழ்கிறார்கள். இந்தக் குடும்பத்திற்கு தலைவரான வாசுதேவனின் சகோதரர்கள் மற்றும் சகோதரி சொந்த வீட்டுடன் சமூகத்தில் உயர் அந்தஸ்தில் வாழ்கிறார்கள். தனியார் ஏற்றுமதி & இறக்குமதி நிறுவனத்தில்  கணக்காளராக பணியாற்றும் வாசுதேவன், உறவினர்களிடமும் … நண்பர்களிடமும்… தன்னுடைய குடும்பத்திற்கான மரியாதையை பெற வேண்டும் என்றால், சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என விரும்புகிறார். மாதாந்திர வாழ்க்கையையே பட்ஜெட் போட்டு வாழும் வாசுதேவன் சென்னையிலேயே மூன்று படுக்கையறை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பை சொந்தமாக வாங்க வேண்டும் என்ற தன்னுடைய கனவிற்காக கடுமையாக உழைக்கிறார்.

வாசுதேவன், குறைவான மார்க்கு வாங்கும் மகனான பிரபுவை, தன் சக்திக்கு மீறி தனியார் பள்ளி ஒன்றில் படிக்க வைக்கிறார். நன்றாக படிக்கும் தன் மகள் ஆர்த்தியை அரசாங்க பள்ளியில் படிக்க வைக்கிறார். சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதற்காக இவர் பணத்தை சேமிக்கும் போதெல்லாம் வேறொரு செலவு வந்து விடுகிறது. இதனால், அவரது சொந்த வீடு கனவு கனவாகவே இருக்கிறது. இறுதியில் அவரும் ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு முதுமை அடைந்து பிள்ளைகளின் நிழலில் வாழத் தொடங்குகிறார். அவருடைய மகனும், மகளும் இணைந்து தந்தையின் கனவை நனவாக்குவதற்காக திட்டமிடுகிறார்கள். அவர்கள் தந்தையின் கனவை- சொந்த வீட்டு கனவை நனவாக்கினார்களா ?இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை.

இதுபோன்ற பீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படத்தில் ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை பொழுதுபோக்கு அம்சங்களுடன் வழங்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் அந்த அனுபவம் இந்தப் படத்தில் கிடைக்கவில்லை. அல்லது முழுமையாக கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.

வாசுதேவன் கதாபாத்திரம் கடினமாக உழைக்கிறது. எனும் போது.. அதில், அனுபவம் வாய்ந்த நடிகர் சரத்குமாரின் கதாபாத்திரத்திற்கேற்ற அழுத்தமான, மனதில் நிற்க கூடிய காட்சிகள் இல்லை.

பிரபு எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தார்த் பிளஸ் டூ மாணவனாகவும், கல்லூரியில் ஐடி படிக்கும் மாணவனாகவும், தான் காதலித்த ஐஸ்வர்யா ( சைத்ரா) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் போது கம்பீரமான ஆண் மகனாகவும், தந்தையின் கனவை நனவாக்க முடியாமல் ஒவ்வொரு முறையும் தோல்வியடையும் போது அவர் ‘சாரிப்பா’ எனும் கேட்கும் போதெல்லாம் ரசிகர்களின் மனதில் தனித்துவமான நடிப்பால் நிறைகிறார்.

ஆர்த்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மீதா ரகுநாத்-  நாயகியாக நடித்து ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றிருந்தாலும்.. இந்த திரைப்படத்தில் கதாநாயகனின் தங்கையாக நடித்து கதையின் சுவாரசியமான சிறிய அளவிலான திருப்பங்களுக்கு உதவும் அவரது நடிப்பும் கவனம் பெறுகிறது.

சாந்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவயானி இயக்குநர் சொன்னதை மட்டும் செய்திருக்கிறார். இந்த கதாபாத்திரமும் அழுத்தமாக எழுதப்படாதது பெருங்குறை. இரண்டாம் பாதியில் திரையில் தோன்றும் யோகி பாபு சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.

இதுதான் கதை என்று தெரிந்ததும் புத்திசாலித்தனமான பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் வரிசை தவறாமல் திரையில் தோன்றுவதால் ரசிக்கமுடியவில்லை!

அம்ரித் ரகுநாத்தின் பாடல்களை விட பின்னணி இசை திரையரங்க அனுபவத்தை வழங்குகிறது.  ஒளிப்பதிவு செய்து இருக்கும் தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஆகியோர் ரசிகர்களை தங்களுடைய கற்பனையான கோணங்களால் உணர்வுபூர்வமாக படத்துடன் பயணிக்க வைக்கிறார்கள்.

முதல் பாதி இரண்டாம் பாதி என்று இல்லாமல் படம் முழுவதும் இடம்பெறும் ஒவ்வொரு காட்சிகளும் நீளம் அதிகம் அதுவே சோர்வை அளிக்கிறது.

காட்சி வழியான எதிர்பாராத திருப்பங்களை விட ..உரையாடல் மூலமாகவே திருப்பங்களை இயக்குநர் அமைத்திருப்பது, பல வெற்றி படங்களை வழங்கிய இயக்குநர் விக்ரமனின் முத்திரையை நினைவு படுத்துகிறது. ஆனால் அதனை கிரிப்பிங்காக சொல்லி இருந்தால் ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடியிருப்பார்கள்.

நடுத்தர மக்கள் எதிர்காலத்திற்காக ஏங்கி.. நிகழ்கால சந்தோஷத்தை அனுபவிக்க மறந்து விடுகிறார்கள் என சொல்லி இருப்பதும் ரசனைக்குரியதாக இருக்கிறது.

சொந்த வீடு ஏன் வாங்க வேண்டும் என வாசுதேவனிடம் கேட்கும்போது, ‘ சொந்த வீடு என்பது ஒரு மரியாதை’ என விளக்கம் அளிப்பது நடுத்தர மக்களின் ஏக்கத்தை துல்லியமாக பிரதிபலிக்கிறது.

கடன் வாங்காமல் உழைத்து சேமித்து அதில் வீடு வாங்க வேண்டும் என்ற வாசு தேவனின் கனவு கனவாகவே விட்டிருப்பது குறை.  இறுதியில் பிரபு கதாபாத்திரம் சொந்த வீடு வாங்குவதற்காக கடன் வாங்குவது, நடுத்தர குடும்பத்தின் இன்றைய சூழலை பிரதிபலிக்கிறது.

3 BHK –  நடுத்தர மக்களின் கனவு மாளிகை!