
‘பருத்திவீரன்’ சரவணன் , நம்ரிதா , அருள் டி.சங்கர், சண்முகம், திருச்செல்வம், விஜய்ஸ்ரீ, இனியா ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 7 தொடர்களைக் கொண்ட, ‘சட்டமும் நீதியும்’ தொடரின் கதையை சூரிய பிரதாப் எழுதியுள்ளார். இயக்கியிருக்கிறார், பாலாஜி செல்வராஜ்.
ஒளிப்பதிவு எஸ்.கோகுல கிருஷ்ணன் , படத்தொகுப்பு ராவணன், இசை விபின் பாஸ்கர், கலை இயக்கம் பாவனா கோவர்தன், பாடல் வரிகள் ஸ்ரீனி செல்வராஜ்.தயாரிப்பு சசிகலா பிரபாகரன், தயாரிப்பு நிறுவனம் 18 கிரியேட்டர்ஸ், வெளியீடு ZEE5 ஒரிஜினல்.
சட்டத்தின் வகைகளையும் அதன் நுணுக்கங்களையும் நன்கு கற்றறிந்தவர், ‘பருத்தி வீரன்’ சரவணன். இருந்தும், எந்த வழக்குகளையும் எடுத்து வாதிடாமல் ஒரு நோட்டரியாக, அதாவது பத்திரங்கள், சொத்து ஆவணங்கள், பிரமாண பத்திரங்கள் உள்ளிட்ட சட்ட ஆவணங்களுக்கு கையெழுத்திடுபவராக, சக வழக்கறிஞர்களின் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகி வருகிறார்.
சட்டப் படிப்பு படித்துவிட்டு, மூத்த வழக்கறிஞரிடம் பயிற்சி பெற முயற்சி செய்து வருகிறார், நம்ரிதா. எல்லா வழக்கறிஞர்களும் நிராகரித்த நிலையில், ‘பருத்தி வீரன்’ சரவணனிடம் பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்கிறது. அதன் பிறகு கோர்ட் வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ஒருவருக்கு நீதி கேட்டு பொதுநல வழக்கு தொடருகிறார்கள். வாதம், பிரதிவாதம் தொடர்ந்து நடக்க, தீக்குளித்தவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் எனும் தகவல் கிடைக்கிறது சரவணனும், நம்ரிதாவும் ஆடிப்போகிறார்கள். இது எதிர்தரப்பு வழக்கறிஞருக்கு தெரிந்தால் பெருத்த அவமானம் ஆகிவிடும் என விக்கித்து நிற்க்கின்றனர். இதன் பிறகு நடந்த சுவாரசியமான சம்பவங்கள் தான் ‘சட்டமும் நீதியும்’.
ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்யும் காட்சியிலிருந்து தொடர் தொடர்கிறது. முதலிரண்டு தொடர்கள் மெதுவாக தொடர்கிறது அதன் பிறகு, கதைக்குள்ளேயே பயணீக்கும் உணர்வு வந்து விடுகிறது. சட்டங்கள் குறித்து, மேம்போக்காக சொல்லாமல் கொஞ்சம் ஆழமாகவே சொல்லியிருக்கிறார்கள். இந்தபத் தொடர், சட்டப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு நிச்சயமாக சுவாரசியத்தினை கொடுக்கும்படியாக, கடைசித் தொடர்வரை திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது பாராட்டுதலுக்குரியது. அது போல் கிரைம் த்ரில்லர் பார்ப்பவர்களுக்கும் பிடிக்கும்.
வழக்கறிஞர் சுந்தர மூர்த்தியாக, கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பருத்திவீரன் சரவணன், சிறப்பான நடிப்பினை நடித்திருக்கிறார். இவரிடம் பயிற்சி பெறும் வழக்கறிஞராக நடித்திருக்கும் நம்ரிதாவும் குறை சொல்ல முடியாத நடிப்பினை கொடுத்திருக்கிறார்.
அரசு தரப்பு வழக்கறிஞராக நடித்திருக்கும் அருள் டி சங்கர், தற்கொலை செய்து கொள்ளும் சண்முகம், திருச்செல்வம், விஜய்ஸ்ரீ, இனியா ராம் ஆகியோரும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர்.
எஸ்.கோகுல கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, விபின் பாஸ்கரின் பின்னணி இசையும் தொடருக்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கிறது.
சட்டமும் நீதியும் தொடரின் வெற்றிக்கு பலம் சேர்த்திருப்பது சட்டப்பிரிவுகள் குறித்த வசனமும்,தாதற்கான காட்சிகளுமே. வழக்கமான சினிமாத்தனங்கள் அதிகமில்லாததும் பலம் தான்.
சில தொடர்களை பார்க்கும் போது தான், முழுத்திரைப்படமாக வந்திருந்தால் இன்னும் சுவாரசியம் கொடுத்திருக்குமே! என எண்ணத்தோணும். அந்த வகையில், இந்த ‘சட்டமும் நீதியும்’ தொடர்!
சட்டமும் நீதியும் – சுவாரசியம்!












