
கெவி திரைப்படத்தினை,ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி (ARTUPTRIANGLES FILM KAMPANY) சார்பில், மணி கண்ணன், பெருமாள் கோவிந்தசாமி, ஜெகன் ஜெயசூர்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். தமிழ் தயாளன் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடித்திருக்க, ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜாக்குலின் லிடியா, சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் ஃபரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் ஜி.பாலசுப்பிரமணியன் சா.ராஜாரவிவர்மா இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு : ஜெகன் ஜெயசூர்யா ,படத்தொகுப்பு : ஹரி குமரன், சண்டைப் பயிற்சி : டான் அசோக், வசனம் : ராசி தங்கதுரை – கிருபாகரன் ஏசய்யா. ஹரி உத்ரா புரொடக்ஷன்ஸ் தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது.
கால காலமாக ஆட்சியாளர்களால், சாலை, மருத்துவம் போன்ற அடிப்படை அத்தியாவசியங்கள் மறுக்கப்பட்ட, கொடைகாணாலில் ஒரு மலை குக்கிராமம். அந்த வசதிகளை கேட்டு நாயகன் ஆதவன் தலைமையில் அக்கிராம மக்கள் போராடுகின்றனர். ஒரு சில நாட்களில் தேர்தல் நடக்கவிருப்பதால் எம் எல் ஏ மக்களை சமாளிக்க முற்படுகிறார். ஆனால், கிராம மக்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்படுகிறது. இதில், வனத்துறை அதிகாரியான சார்லஸ் வினோத்துக்கும், ஆதவனுக்கும் நேரடி மோதல் உருவாகிவிடுகிறது. சார்லஸ் வினோத் கடும் கோபம் கொள்கிறார். இரவில் தனியாக வரும் ஆதவனை அடித்து சித்ரவதை செய்து உயிரோடு எரிக்க முயற்சிக்கின்றனர். அவர்களிடமிருந்து தப்பித்து காட்டுக்குள் மறைகிறார், ஆதவன். இதற்கிடையே, ஆதவனின் மனைவி ஷீலாவுக்கு பிரசவ வலி வருகிறது. கிராமத்தினர்க்ஷ் அடிவாரத்தில் இருக்கும் மருத்துவ மனைக்கு, அவரை டோலி கட்டி தூக்கிச் செல்கின்றனர். வழியில் உயிருக்கு போராடுகிறார். ஆதவன் – ஷீலா அவர்களது குழந்தை உயிர் பிழைத்தனரா, இல்லையா? என்பது தான் ‘கெவி’.
‘மலையன்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நாயகன் ஆதவன், கதைக்கு பொருத்தமாக இருப்பதோடு, பாராட்டும்படி நடித்திருக்கிறார். சார்லஸ் வினோத்திடம் சிக்கி உயிருக்கு போராடியபடி, காட்டுக்குள் ஓடி ஒளியும் போது பரிதாபத்தினை வரவழைக்கிறார்.
நிறைமாத கர்ப்பிணியாக நடித்திருக்கும் ஷீலா, எப்போதும் போல் இயல்பாகவும், சில காட்சிகளில் சற்று மிகையாகவும் நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸில் நெஞ்சை பதற வைத்து விடுகிறார்.
அரசு மருத்துவ மனையின் தலைமை மருத்துவராக நடித்திருக்கும் காயத்ரி, ஒரு சில காட்சிகள் தான் என்றாலும், குரூர கதாபாத்திரத்தில் நடித்து, பாராட்டுக்களை அள்ளிச்சென்றுவிடுகிறார்.
பயிற்சி மருத்துவராக நடித்திருக்கும் ஜாக்குலின் லிடியா, வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சார்லஸ் வினோத், ஷீலாவின் தம்பியாக நடித்திருக்கும் விவேக் மோகன், தர்மதுரை ஜீவா, போஸ்ட் மேனாக நடித்திருக்கும் உமர் ஃபரூக் என அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யா, இசையமைப்பாளர் பாலசுப்ரமணியன்.ஜி- இருவரும் நேர்த்தி.
ஆதவன், வினோத் சார்லஸ் கும்பலிடம் சிக்கி உயிருக்கு போராடும் காட்சிகள், இயல்பினை மிஞ்சி இருப்பதால் எரிச்சல் ஏற்படுகிறது. அதை இயக்குநர் தவிர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
5 வருடங்களுக்கு ஒரு முறை, ஓட்டுப் பெட்டிகள் பாதுகாப்புடன் குக்கிராம மக்களிடம் சென்றடைவதைப் போல், அத்தியாவசிய தேவைகளும் அவர்களுக்கு சென்றால் தான் உண்மையான ஜனநாயகம்!
‘கெவி’ மறுக்கப்பட்ட மலைவாழ் மக்களின் கூக்குரல்!













