‘தலைவன் தலைவி’ – (விமர்சனம்) யோகி பாபுவுக்காக பார்க்கலாம்!
‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பில், டிஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் , அர்ஜுன் தியாகராஜன் ஆகிய இருவரது தயாரிப்பில் வெளிவந்துள்ள படம், தலைவன் தலைவி. இதில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், பருத்திவீரன் சரவணன், தீபா சங்கர், காளி வெங்கட், ‘மைனா’ நந்தினி, ஜானகி சுரேஷ் , சிறுமி மகிழினி , ஆர் கே சுரேஷ், யோகி பாபு ,செம்பன், அருள்தாஸ், வினோத் சாகர், ரோஷினி, முத்துக்குமார், சென்ட்ராயன், கிச்சா ரவி, ரோகன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி, இயக்கி உள்ளார் பாண்டிராஜ்.
இசை : சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு : எம் சுகுமார், கலை இயக்கம் : கே. வீரசமர், படத்தொகுப்பு: பிரதீப் ஈ ராகவ், சண்டைப் பயிற்சி : கலை கிங்ஸன்.
ஆகாச வீரன் (விஜய் சேதுபதி), பேரரசி ( நித்யா மேனன்) இருவரும் புது மணமான தம்பதியினர். ஆகாச வீரன், பேரரசியின் மீது அளவற்ற அன்பும் காதலும் கொண்டிருக்கிறார். இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது. இப்படியான சூழலில், பேரரசியின் மாமியார் பொட்டுவுடனும் (தீபா சங்கர்), நாத்தனார் ராகவர்த்தினியுடனும் (ரோஷினி) சிறு சிறு மோதல்கள் உருவாகிறது. ஆரம்பத்தில் சிறிதாக இருந்த மோதல்கள் நாளடைவில் பெரிதாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக ஆகாச வீரன் குடும்பத்தினரும், பேரரசி குடும்பத்தினரும் அடிதடியில் இறங்குகின்றனர். இதன் காரணமாக ஆகாச வீரனும், பேரரசியும் பிரிந்து விடுகின்றனர். இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்தனரா, இல்லையா? என்பது தான், ‘தலைவன் தலைவி’.
‘ஆகாச வீரன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, ஒரு சில காட்சிகளைத் தவிர அனைத்து காட்சிகளிலும் மிகையான நடிப்பை கொடுத்திருக்கிறார். முதல் பாதி முழுவதும் அய்யோ! ஏன் இப்படி நடிக்கிறாரு? என ரசிகர்களை புலம்ப விடுகிறார். இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் பரவாயில்லை.
ஆகாச வீரனின் மனைவி பேரரசியாக நித்யா மேனன். ஏனோ அவரது நடிப்பு பெரிதாக ஈர்க்கவில்லை! அவரது திறமையும் சரியாக வெளிப்படவில்லை!
சித்திரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், யோகிபாபு. ரசிகர்களுக்கு ஒரே அதரவு இவர் தான். இவர் வரும் அனைத்துக் காட்சிகளிலுமே சிரிப்பலை! தனியாளாக நின்று கலக்குகிறார்.
விஜய் சேதுபதியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் சரவணன் – தீபா சங்கர். நித்யா மேனனின் பெற்றோர்களாக நடித்திருக்கும் செம்பன் வினோத் – ஜானகி சுரேஷ். இவர்களுடன் நடித்திருக்கும்
ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட், ‘மைனா’ நந்தினி, வினோத் சாகர், ரோஷினி, செண்ட்ராயன் என அனைவருமே திரைக்கதையை நகர்த்திச் செல்வதில் பெரிதும் உதவியிருக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணின் இசையமைப்பில் ஒரு சில பாடல்கள் நன்றாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கேற்றபடி இல்லை.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு ஓகே!
நீளமான காட்சிகள். ஒவ்வொரு காட்சியிலும் ஏகப்பட்ட நட்சத்திரங்கள், இடைவிடாத வசனங்கள். இதனால், ரசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
எழுதி, இயக்கியிருக்கும் பாண்டிராஜ், தம்பதியினரிடையே புரிதல் இருந்தால் விவாகரத்து தேவைப் படாது. என்பதை அழுத்தமாக சொல்வதற்கு பதில், வித விதமான புரோட்டோ வகைகளை விளம்பரப் படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘தலைவன் தலைவி’ யை, யோகி பாபுவின் காமெடி காட்சிகளுக்காக பார்க்கலாம்!