இந்திய விமானப்படையின் பைலட்டான கார்த்தி ஒரு பிளே பாயும் கூட,ஒரு சமயத்தில் ஒரு பெண்ணை மட்டும் காதலித்து கழற்றிவிட்ட பின் அடுத்த பெண்ணை காதலிக்கும் ஒரு கேரக்டர், எப்போதுமே தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்க கூடிய நபர், பிறரின் உணர்வுகளை மதிக்க தெரியாதவரும் கூட, காஷ்மீரில் வேலை. ஒரு நாள் தன் தோழியுடன் ஜீப்பில் பயணிக்கும்போது, ஏற்படும் விபத்தில் சிக்கி அடிபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவருக்கு சிகிச்சை அளிக்கிறார் டாக்டர் அதிதி. இதையடுத்து இருவருக்கும் காதல், புரிதல் இல்லாததால் ஊடல், மோதல்… பிரிவு. அதைத் தொடர்ந்து யுத்த சூழலில், கார்த்தி பாகிஸ்தான் ராணுவத்திடம் போர்க் கைதியாக சிக்கிக் கொள்ள, அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்… அவரின் காதல் என்னவானது என்பது தான் இப்படத்தின் மீதிக்கதை!
காற்று வெளியிடை, மணிரத்னத்தின் முந்தைய படங்களான ரோஜா, பம்பாய், அலைபாயுதே, ஓகே கண்மணி எல்லாம் அநியாயத்திற்கு நினைவுக்கு வந்து போகின்றன. காட்சி அமைப்புகளும் அதே மாதிரி என்பதால்ஒரு வித சோர்வு நம்மிடம் சீக்கிரமே ஒட்டிக்கொள்கிறது. ரவிவர்மன் ஒளிப்பதிவு ஓவியம்.ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் அழகாகவும் தத்ரூபமாகவும் அமைத்திருக்கிறார்.ஆனால், கார்த்தியை அழகாக காட்ட முயற்சித்து தோல்வியடைந்திருக்கிறார். கார்த்தியை பொறுத்த வரையில் ஏற்கனவே நடிப்பில் அனுபவம் இருந்தாலும், குளோசப் காட்சிகளில் அவரின் முகபாவனை ரசிக்கும் அளவிற்கு இல்லை. கார்த்தியை இயல்பாக நடிக்க விட்டிருந்தால், ஒரு வேளை நன்றாகவே செய்திருப்பாரோ, என்னவோ? தமிழுக்கு அதிதி அறிமுகமாகும் முதல் படம் இது!. கொள்ளை அழகு,ஒவ்வொரு காட்சியிலும் அழகு பதுமையாகவே தெரிகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, பாடல்களை விட பின்னணி இசை சூப்பர்! மொத்தத்தில் மணிரத்னம் இனியாவது புதுக்கதையை யோசிக்கலாம்! எவ்வளவு நாளைக்கு தான் லிவிங் டு கெதர் கலாச்சாரத்துக்கு கலர்,கலரா சாயம் பூசுவாரோ!