பிரபு சாலமன் இயக்கத்தில், கடந்த 2012ஆம் ஆண்டு விக்ரம் பிரபு-லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம், கும்கி . இப்படத்தின் அடுத்த பாகம் குறித்து அப்போதே ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில்,கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பின்னர் கும்கி-2 படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
முந்தைய ‘கும்கி’ படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், புதிய கதை அமைப்பில், பென் இந்தியா நிறுவன தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில், ஒரு இளைஞனுக்கும் சிறிய யானைக்கும் இடையேயான நட்பு, பாசம் மையக்கருவாக அமைகிறது.இதில்,முன்னணி கதாபாத்திரங்களில் மதிவனன் மற்றும் ஷ்ரிதா ராவ் நடிக்கின்றனர். இவர்களுடன் அர்ஜுன் தாஸ், ஹரீஷ் பெரடி, சுசேன் ஜார்ஜ் போன்ற பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
இப்படத்தின் முதல் பாகத்துக்கு டி. இமான் இசையமைத்து இருந்த நிலையில், இரண்டாம் பாகத்துக்கு இசையமைப்பாளராக நிவாஸ் கே. பிரசன்னா இணைந்துள்ளார்.இப்படத்தின் முதல் பாகத்தின் கிளைமாக்சில் யானை உயிரிழக்கும் காட்சி, பலரையும் கண் கலங்கச் செய்தது. இப்போது, கும்கி 2-வின் மோஷன் போஸ்டரில், “நான் மீண்டும் பிறந்துவிட்டேன்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.












