‘பல்டி’ – விமர்சனம்!

ஷேன் நிகம், சாந்தனு பாக்யராஜ், அக்ஷய் ராதாகிருஷ்ணன், ஷிவ ஹரிஹரன், கே. செல்வராகவன், அல்போன்ஸ் புத்ரன், ப்ரீத்தி அஸ்ரானி, பூர்ணிமா இந்திரஜித், அக்ஷய் ராதாகிருஷ்ணன், விஜய் பார்கவ், நந்திதா சந்தீப், நித்தின் தாமஸ் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம் பல்டி. அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கியிருக்கிறார். சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஷேன் நிகம், சாந்தனு பாக்யராஜ், அக்ஷய் ராதாகிருஷ்ணன், ஷிவ ஹரிஹரன் ஆகியோர், ஒரே பகுதியில் வசித்து வரும் நண்பர்கள். கபடி விளையாட்டு வீரர்களான இவர்கள், ‘பஞ்சமி’ என்ற பெயரில் ஒரு அணியை அமைத்து விளையாடி வருகிறார்கள். சுற்று வட்டாரத்தில் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வருகிறார்கள். வட்டித்தொழில் செய்து வரும் ரௌடி கே. செல்வராகவன், ‘பொற்றாமரை’ என்ற பெயரில் ஒரு கபடி அணியை வைத்திருக்கிறார்.
ஒரு முறை நடக்கும் கபடி போட்டியில், ‘பஞ்சமி’ அணி, பொற்றாமரை அணியை வென்று விடுகிறது. செல்வராகவனின் அணியைச் சேர்ந்தவர்களுக்கும் சாந்தனு பாக்யராஜ் அணியைச் சேர்ந்தவர்களுக்கும் அடிதடி மோதல் உருவாகிறது. அதைத்தொடர்ந்து ஷேன் நிகம், சாந்தனு பாக்யராஜ், அக்ஷய் ராதாகிருஷ்ணன், ஷிவ ஹரிஹரன் ஆகிய நால்வரும் செல்வராகவனிடம் சென்று சமாதானம் பேசுகின்றனர். அப்போது அந்த நால்வரையும் செல்வராகவன் தனது வட்டித்தொழிலுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்.
இந்நிலையில், ரௌடி செல்வராகவனின் ராஜ்ஜியத்தை எதிர்த்து அல்போன்ஸ் புத்ரன், பூர்ணிமா இந்திரஜித் என்ற ரௌடிகளும் செயல்பட்டு வருகின்றனர். வர்கல் மூவருக்குள்ளும் அதிகாரப்போட்டி வலுத்த நிலையில், ஷேன் நிகம், சாந்தனு பாக்யராஜ், அக்ஷய் ராதாகிருஷ்ணன், ஷிவ ஹரிஹரன் ஆகிய நால்வரும் ஒரு பெரும் பிரச்சனையில் சிக்குகின்றனர். அதிலிருந்து தப்பித்தார்களா, இல்லையா? என்பது தான் ‘பல்டி’.
ஷேன் நிகம், ஒரு கபடி வீரருக்கான உடல்மொழியை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். குறிப்பாக ரைட் போவதற்கு முன்னர் செய்யும் மேனரிசம் அனைவரையும் கவர்ந்து விடுகிறது. அதே போல் அவர் அடிக்கும் பல்ட்டியும். ஆக்ஷனில் அட்டகாசம் காட்டி நடித்திருக்கிறார். காதலி ப்ரீத்தி அஸ்ரானியை காணும் போதும், அவர் சொல்லும் காதலை புரிந்து கொள்ளுமிடத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸில் அவருக்கும் சாந்தனுக்கும் நடக்கும் உரையாடலின் போதும் வெகு சிறப்பாக நடித்திருக்கிறார்.
சாந்தனு, முன், பின் என்ன நடக்கும் என்பதை யோசிக்க முடியாத, குழப்பமான கதாபாத்திரத்தில் நடித்து, தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். பூர்ணிமா இந்திரஜித் நடத்தும் சகுனித்தனத்தால் தனது நண்பர்களை பறிகொடுக்கும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக, ஷிவ ஹரிஹரனை கே.செல்வராகவன் குத்திக்கொலை செய்யும் காட்சியில் பரிதவிக்கும் காட்சியை சொல்லலாம். இந்தக்காட்சியில், ஷிவ ஹரிஹரனும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
அன்பொழுக பேசி அட்டகாசம் செய்யும், கொடூரமான கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன், டெரர்ராக நடித்திருக்கிறார். மலையாளத் திரைப்படத்திற்கு புதிய வில்லனாக வலம் வருவார். மற்றொரு வில்லனாக இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். சில காட்சிகள் என்றாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரோட கெட்டப் சூப்பர்.
நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி. ஷேன் நிகமின் காதலியாக நடித்திருக்கிறார். கிடைத்த காட்சிகளில் தன்னை நிலை நிறுத்தியுள்ளார்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையில், ‘ஜாலக்காரி’ பாடல் பலரின் விருப்பப்பாடலாக இருந்தாலும், படத்தில் இடம்பெறும் போது பெரிதாக ஈர்க்கவில்லை! பின்னணி இசையைப் பொறுத்தவரை வழக்கமான கமர்ஷியல் ஐட்டமாக இருக்கிறது. மொத்தத்தில் இசை, அனிரூத்தின் பிரதி பிம்பமாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜெ.புலிக்கல்லின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. சண்டைக்காட்சிகளையும், ‘கபடி’ ஆட்டக் காட்சிகளையும் பிரமிக்கத்தக்க வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார். எடிட்டர் ஷிவ்குமார் வி.பணிக்கரின் எடிட்டிங்கும் படத்தின் தரத்தினை உயர்த்தியுள்ளது. எழுதி இயக்கியிருக்கும் உன்னி சிவலிங்கம், வழக்கமான ஒரு கதையை கொடுத்துள்ளார். அதில், எந்தவிதமான புதுமையோ, வித்தியாசமோ இல்லை. சண்டைக்காட்சிகளில் அதிக கவனம் செலுத்தியிருப்பவர், அதற்கான எமோஷனல் காட்சிகளை உருவாக்கவில்லை.
‘பல்டி’ – அதிரடி ஆக்ஷன் திரைப்படம்!