‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபிநய் மரணம்!

 

தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின்  மூலம் நடிகராக அறிமுகமானவர்  அபிநய்.(வயது 44) அதன் பிறகு ஜங்ஷன், சிங்கார சென்னை  உள்பட சில படங்களில் கதாநாயகனாக  நடித்தார்.தொடர்ந்து சரிவர வாய்ப்புகள் அமையாததால், பின்னர் கிடைத்த  சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தமிழ், மலையாளம் என 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், சூர்யாவின் ‘அஞ்சான்’, கார்த்தியின் ‘பையா’, ‘காக்கா முட்டை’ போன்ற படங்களில் சில கதாபாத்திரங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தும், ‘துப்பாக்கி’ பட வில்லன் வித்யூத் ஜம்வாலுக்குக் குரல் கொடுத்தும் திரையுலகில் பங்களித்துள்ளார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். போதிய வருமானம் இல்லாமல் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வருவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் கல்லீரல் நோய் காரணமாக மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.அவர் வயிறு வீங்கிய நிலையில்,எலும்பும் தோலுமாக காட்சியளித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி  ரசிகர்களைஅதிர்ச்சியில் ஆழ்த்தியது . அபிநய் தனது சிகிச்சைக்குப் பண உதவி கோரி வீடியோ வெளியிட்ட நிலையில், அவருடன் ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் நடித்திருந்த தனுஷ் ரூ.5 லட்சம் நிதியுதவியும், சின்னத்திரை நடிகர் கேபி ஒய்  பாலா ரூ.1 லட்சம் நிதியுதவியும் வழங்கினர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவர் காலமானார்.. அவரது மறைவு தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.