‘கும்கி 2’ – (விமர்சனம்.) விளையாட உதவாத பொம்மை!

மதி , ஷ்ரிதா ராவ், சூசன், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரிஷ் பெராடி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபுசாலமன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு, எம். சுகுமார். இசை, நிவாஸ் கே. பிரசன்னா. ‘பென் மருதர் சினி என்டர்டெய்ன்மென்ட்ஸ்’ சார்பில், ஜெயந்திலால் காடா, தவல் காடா தயாரித்துள்ளனர்.
‘ராஜ பீமா’ மற்றும் ‘படைத்தலைவன்’ படங்களின் சாயலில் வெளிவந்துள்ள படம் தான், கும்கி 2. இயக்குநர் பிரபு சாலமனுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்த படம் கும்கி. அவர், கும்கி 2 படத்தை எதற்காக எடுத்தார்? என்ற சந்தேகம் எழுகிறது, இந்தப்படத்தை பார்த்தபோது.
சாராயம் விற்கும் சூசனின் மகன் தான் நாயகன் மதி. மகன் மீது பெரிதாக பாசம் காட்டாதவர். இதனால், சிறு வயதில் இருந்தே பாசம் என்றால் என்ன? என்று தெரியாத அளவில், குழிக்குள் மாட்டிக்கொண்ட யானையை காப்பாற்றுகிறார். அப்போதிலிருந்து இருவரும் நெருக்கமாகி விடுகின்றனர். இருவரும் வளர்ந்து விட்ட நிலையில், சூசன் யானையை மதிக்கு தெரியாமல் விற்று விடுகிறார். யானையை பிரிந்து இருக்க முடியாமல், தனது நண்பன் ஆண்ட்ரூஸுடன் அதைத் தேடி கிளம்புகிறார். யானை கிடைத்தா, இல்லையா? என்பது தான். கும்கி 2 படத்தின் கதை.
‘ராஜ பீமா’ மற்றும் ‘படைத்தலைவன்’ படங்களின் கருப்பொருள் அப்படியே இருப்பதால், ரசிக்க முடியவில்லை. அதோடு காட்சிகளும் பெரிதாக ரசிக்கும்படி இல்லை. யானையை பள்ளத்தில் இருந்து சிறுவன் காப்பாற்றுவதை நம்ப முடியவில்லை. யானைக்கும், நாயகன் மதிக்கும் இடையே உள்ள பாசமும் சரியாக காட்சிப்படுத்தப்படவில்லை. மனதை தொடும்படியான காட்சிகள் எதுவுமே இல்லாததால், படம் பார்ப்பவர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகிவிடுகின்றனர்.
அறிமுக நடிகர் மதி நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கான காட்சிகளில் அழுத்தம் இல்லை. யானையை தேடிச்செல்லும் போது, நமக்கு அவர் மேல் எந்த பரிதாபமோ, யானை கிடைத்துவிட வேண்டும் என்ற பதை பதைப்போ வரவில்லை. மாறாக, யானை கிடைத்தால் என்ன, கிடைக்கா விட்டால் என்ன? என்ற சலிப்பு தான் வருகிறது. பிரபு சாலமனிடம் இருந்து இப்படி ஒரு படமா!?
ஒளிப்பதிவும், இசையும் வெகு சுமார். மற்ற தொழில் நுட்பமும் சுமாராகவே இருக்கிறது. காடு, யானை, ஒரு ஹீரோ இருந்தால் மட்டும் போதும். திரைக்கதை தேவை இல்லை. என நினத்து விட்டார் போல, இயக்குநர் பிரபு சாலமன்.
மொத்தத்தில், ‘கும்கி 2’ விளையாட உதவாத பொம்மை!