‘மகா சேனா’ – விமர்சனம்!

‘மருதம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில், விமல், ஸ்ருஷ்டி டாங்கே, மஹிமா குப்தா , யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், அல்ஃப்ரெட் ஜோஸ், சிவகிருஷ்ணா, இலக்கியா, சுபாங்கி ஜா, விஜய் சேயோன் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், மகா சேனா. தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கிறார்.
அடர் காட்டுப்பகுதியில் வசிக்கும், இருவேறு பழங்குடி இனத்தைச் சேர்ந்த செங்குட்டுவன் (விமல்) , கங்கா (மஹிமா குப்தா) இருவரும் காதலர்கள். இவர்களே அந்தந்த குழுவின் தலைவர்களாக இருந்து வருகின்றனர். இந்த பழங்குடி மக்களிடையே பல தலைமுறைகளாக, ஒரு சிலை தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. அது தொடர்பாக, செங்குட்டுவன் மற்றும் கங்காவின் அப்பாக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த சம்பவத்தால், இவர்களுக்குள் மேலும் பகை உருவாக, இருவரும் பிரிந்து விடுகின்றனர்.
காலங்கள் கடந்த நிலையில், (விமல்) செங்குட்டுவன், (சிருஷ்டி டாங்கே), பொம்மியையும் , (மஹிமா குப்தா) கங்கா, (விஜய் சேயோன்) இடும்பனையும் கல்யாணம் செய்து கொள்கின்றனர். இவர்களுடைய பகையை பயன்படுத்திக்கொள்ளும் (கபீர் துஹான் சிங்) கிங் ஆப் காட்ஸ், அந்த சிலையைக் கைப்பற்ற முயற்சிக்கிறார். இதற்கு எடுபிடியாக (ஜான் விஜய்) பிரதாப் என்ற வன இலாகா அதிகாரி செயல்படுகிறார். இதையடுத்து, இந்த மூன்று தரப்பினருக்கும் இடையே என்ன நடந்தது? என்பது தான், ‘மகா சேனா’ படத்தின் மீதிக்கதை!
விமல், இந்த படத்திற்கு ஹீரோவா? எனும் கேட்கும் அளவிற்கு, இடைவேளைக்கு முன்னர், ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். அதுவும் அழுத்தமில்லாமல் இருக்கிறது. அதன் பிறகு, ஒரே திசையில் செல்லமுடியாமல் சிக்கித்தவிக்கும் கதை, பல திசைகளில் பயணிப்பதுடன் அயர்வை ஏற்படுத்தி விடுகிறது.
எழுதி, இயக்கியிருக்கும் தினேஷ் கலைச்செல்வன், ஒரு சுவாரஸ்யமான கதையை யோசித்துவிட்டு, அதை காட்சிகளாக பிரிப்பதிலும், கதாபாத்திரங்களை வடிவமைப்பதிலும் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். திரைக்கதைக்கு தேவையில்லாத யானை. அதைப் பற்றி எந்த புரிதலுமின்றி காட்சிப்படுத்தியிருக்கிறார். மேலும், படத்திற்கு தேவையற்ற சில காட்சிகளை எதற்கு வைத்தார். என்றும் புரியவில்லை. உதாரணமாக யானையால் கொல்லப்படும் சிறுமியும் அது சம்பந்தமான காட்சிகள். கண் திறக்கமலேயே நடக்கப்போவதை சொல்லும் சித்தர். காட்டுக்குள் ட்ரெக்கிங் செல்லும் கல்லூரி மாணவர்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்.
‘மகா சேனா’ திரைப்படத்தின் மிகப்பெரிய பலம், மற்றும் ரசிக்கக்கூடிய அம்சம். படப்பிடிப்பு நடத்தப்பட்ட இடம் தான். அந்த இடங்களை பார்ப்பது, சுகமான அனுபவத்தை தருகிறது. ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு D R, ஃபோகஸ் புல்லர் (Focus Puller) உடன் இணைந்து செயல்பட்டிருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இயக்குநரின் விருப்பத்தின் பேரில், விமல், ஸ்ருஷ்டி டாங்கே, மஹிமா குப்தா , யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், அல்ஃப்ரெட் ஜோஸ், சிவகிருஷ்ணா, இலக்கியா, சுபாங்கி ஜா, விஜய் சேயோன் உள்ளிட்ட அனைவரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் – மனாஸ் பாபு D R , இசை – A.பிரவீன் குமார் , பின்னணி இசை – உதய் பிரகாஷ் U P R, கலை இயக்குனர் – V S தினேஷ் குமார், படத்தொகுப்பாளர் – நாகூரான் ராமச்சந்திரன் , சண்டைக்காட்சி – ராம்குமார் , பாடல் வரிகள் – தினேஷ் கலைச்செல்வன், பாபு வசிகர்மன் , உடை – ஹேமா , ஒப்பனை – ஆர்.கே , நடன இயக்குனர் – அமீர்.
‘மகாசேனா’ – மன்னன் இல்லாத சேனா!