பாரதிராஜா உடல் நிலை சீராக உள்ளது: இயக்குனர்கள் வெளியிட்ட வீடியோ!
பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா(வயது 84) . மூச்சுவிடுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்நிலையில்,“பாரதிராஜா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு இடமில்லை. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் உள்ளார். பயப்படும் அளவுக்கு எந்த ஆபத்தும் இல்லை” என எம்ஜிஎம் மருத்துவமனை இன்று மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பெப்சி சங்கத்தலைவர் ஆர்கே செல்வமணி தலைமையிலான இயக்குநர்கள் குழு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து அப்டேட் வழங்கியுள்ளது. அவர்கள் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “நாங்கள் பாரதிராஜாவை நேரில் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. அவருக்கு நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அவரது முக்கிய உடல் உறுப்புகள் நன்றாக செயல்பட்டு வருகின்றன. தற்போது அவரை பார்ப்பதற்கு அனுமதி இல்லை. தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். குடும்பத்தினருடனும் பேசியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், “மருத்துவர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து அப்டேட் கேட்டு வருகிறோம். அவர்களும் உடல்நிலை முன்னேற்றம் குறித்து தகவல் தருவதாக கூறியுள்ளனர்” என இயக்குநர்கள் ஏ.ஆர். முருகதாஸ், லிங்குசாமி, சீமான்,சீனுராமசாமி மற்றும் தயாரிப்பளார் கலைப்புலி எஸ்.தாணு, உள்ளிட்ட பலர் விளக்கம் அளித்துள்ளனர்.