‘பூக்கி’ – விமர்சனம்!

‘விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்’ சார்பில், மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அஜய் திஷன், ஆர் கே தனுஷா, பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக்பாஸ் சத்யா, எம் ஜே ஸ்ரீராம், ராதா, அஸ்வின் ராம், ஷியாரா சார்மி, பிரியங்கா உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் திரைப்படம், பூக்கி. ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார், கணேஷ் சந்திரா. கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார், புதிய பரிதி. எடிட்டிங் செய்து இசையமைத்திருக்கிறார், விஜய் ஆண்டனி.
அஜய் திஷனும், ஆர் கே தனுஷாவும் 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார்கள். எதிர்பாராமல் நடக்கும் ஒரு விஷயத்தால் இருவரும் பிரிகிறார்கள். பிரிந்தாலும், இருவருமே ஒருவரை ஒருவர் மறக்க முடியாமல் தவிக்கின்றனர். இருவரது நண்பர்களும் மறப்பதற்கு யோசனைகளை கூறுகின்றனர். யோசனையின் படி, இருவரும் பிரிந்தார்களா, சேர்ந்தார்களா? என்பது தான், பூக்கி.
நாயகனாக நடித்திருக்கும் அஜய் திஷனின் நடிப்பு, முந்தைய படத்தினை விட இதில் நல்ல முனேற்றம் ஏற்பட்டுள்ளது. பாடல் காட்சிகளில் நன்கு நடனமாடியிருக்கிறார். வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழியிலும் கவனம் ஈர்க்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஆர் கே தனுஷா, இளைஞர்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறார். குறிப்பாக ‘பிடிக்கலே’ குத்து பாட்டில் அனைவரையும் வெகுவாக கவர்ந்து விடுகிறார்.
மேலும் பாண்டியராஜன், இந்துமதி மணிகண்டன், எம் .ஜே . ஸ்ரீராம், ராதா, ஷியாரா சார்மி , பிக் பாஸ் சத்யா, அஸ்வின் ராம், சுனில், லட்சுமி மஞ்சு, ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி உள்ளிட்ட பலரும் திரைக்கதை நகர்வுக்கு பயன்பட்டிருக்கின்றனர்.
படம் நிறைய பாடல்கள். சில இடங்களில் அது வேகத்தடையாக இருக்கிறது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இளைஞர்களை குறிவைத்து பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
காதலர்களின் பிரிவுக்கு பின்னர் ஏற்படும் உளவியல் மாற்றங்களும், அதை அவர்கள் எதிர்கொள்வதும் தான் இந்தப்படத்தின் கதை. அதை இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் சொல்லியிருக்கிறார்கள்.
சிம்புவின் காதல் குறித்தும், அவர் சந்தித்த பிரச்சனை குறித்தும், வெவ்வேறு நிகழ்வுகளில் அவர் பேசிய பேச்சுக்களை திரைக்கதையில் பயன்படுத்தியிருப்பது, சிறப்பாக இருக்கிறது.
‘பூக்கி’ – Gen Z ரசிகர்களுக்கானது!