‘888 புரொடக்ஷன் & செல்லுலாய்டு கிரியேஷன்ஸ்’ சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம், ஆழி. இதில் சரத்குமார் , இந்திரஜித் ஜெகஜித்,தேவிகா சதீஷ், வையாபுரி , ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரைச்செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஸ் பாபு, பிஜு மாவுங்கள் வர்கீஸ், தீனா பாட்டியா, நிகில் முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், மாதவ் ராமதாசன். பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார், ஜாசி கிப்ட். பின்னணி இசையமைத்திருக்கிறார், வில்லியம் ஃப்ரான்ஸிஸ்.
கடற்கரை பகுதியில், மீன்பிடி படகு மெக்கானிக்காக இருந்து வரும் சரத்குமார், ஆயுதங்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் தொழிலையும் செய்து வருகிறார். பெரும் செல்வந்தரான இவரது ஒரே மகள் தேவிகா சதீஷை மிகவும் செல்லமாக வளர்த்து வருகிறார். விளிம்பு நிலையில் வசித்து வரும் வையாபுரியின் மகன் இந்திரஜித் ஜெகஜித். ஒரே கல்லூரியில் படிக்கும் இந்திரஜித் ஜெகஜித், தேவிகா சதீஷ் இருவரும் காதலித்து வருகிறார்கள். இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் சரத்குமார், இந்திரஜித் ஜெகஜித்தை நடுக்கடலுக்குள் கடத்திச்சென்று அடித்து சித்ரவதை செய்கிறார். அங்கே நடக்கும் ஒரு சம்பவத்தால் இருவருமே உயிருக்கு போராடும் சூழல் உருவாகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
கடலுக்கு இன்னொரு பெயர் ஆழி. நடு கடலுக்குள் மனம் மற்றும் உயிர் போராட்டங்களுக்கு இடையே சிக்கித்தவிக்கும் முக்கிய கதாபாத்திரங்களாக சரத்குமார், இந்திரஜித் ஜெகஜித் நடித்திருக்கிறார்கள். ரு சின்ன போட்டுக்குள் இவர்கள் இருவரும் மோதிக்கொள்வதும், பின்னர் இருவருமே தப்பிக்க முயற்சிப்பதும் என கொஞ்சம் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் படமாக்கியிருக்கிறார், இயக்குநர், மாதவ் ராமதாசன்.
மகளிடம் பாசம், காதலனிடம் குரோதம் காட்டும் சரத்குமார், க்ளைமாக்ஸில் இயலாமையையும் வெளிப்படுத்தி சிறப்பாகவே நடித்திருக்கிறார். அவரது விக்கையும், தாடியையும் சரியாக வடிவமைத்திருக்கலாம்.
இந்திரஜித் ஜெகஜித், கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில், வெகு சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். தேவிகா சதீஷிடம் உருகுவதும், சரத்குமாரிடம் உயிர்பிச்சை கேட்கும் காட்சியிலும் கவனம் பெறுகிறார்.
சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் தேவிகா சதீஷ், வெகு சில காட்சிகளில் நடித்திருக்கிறார். அழகாக இருப்பதோடு, குறை சொல்ல முடியாத நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்திரஜித் ஜெகஜித்தின் பெற்றோர்களாக நடித்திருக்கும் வையாபுரி, தாமரை செல்வி மற்றும் ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஷ் பாபு, பிஜு மவுங்கல் வர்கீஸ், டீனா பாட்டியா போன்றோருக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை. அனைவரும் வந்து போகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆனந்த் என்.நாயரின் ஒளிப்பதிவு, வில்லியம் ஃப்ரான்ஸிஸ் பின்னணி இசை, கே.ஸ்ரீநிவாஸ் எடிட்டிங் மூன்றுமே சிறப்பாக இருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் மாதவ் ராமதாசன், உயிருக்கு போராடும் இருவருடைய எண்ண ஓட்டங்களை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆழி – ஆர்ப்பரிக்கவில்லை!












