தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர்
முதல்வருடனான இந்த சந்திப்பில் விஷால், கதிரேசன், ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ்ராஜ், கெளதம் மேனன், ஆர்.பி.உதயகுமார், அபிராமி ராமநாதன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.இச் சந்திப்பின் போது,
முதல்வரிடம் திரையுலகம் சார்பில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. இந்த மனுவில், ‘திரையரங்குகள் உருவாக்க அனுமதி, திருட்டு விசிடி ஒழிப்பு, பேருந்துகள்/தனியார் கேபிள் டிவிகளில் உரிமம் பெறாத திரைப்படங்களை ஒளிபரப்புவதை தடை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தது.
நடிகர் சங்க செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய மாநில அரசுகளுக்கு வைத்த கோரிக்கை கவனிக்கப்படாமல் இருப்பதால் வரும் ஜூன் 1 முதல் திரையுலகினர்களின் ஒட்டுமொத்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தார்.
இதன் காரணமாக இம்மாத இறுதி வாரத்தில் யாரும் திரைப்படங்களை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்றும் விஷால் கேட்டுக்கொண்டார். எனவே வரும் 19ஆம் தேதி வரும் வெள்ளியை அடுத்து திரைப்படங்கள் வெளிவராது என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மே 26ஆம் தேதி சமுத்திரக்கனியின் ‘தொண்டன்’ மற்றும் அருள்நிதியின் ‘பிருந்தாவனம்’ ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் விஷாலின் வேலை நிறுத்தத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஷால் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ள நிலையில், ஜூன் 1 ந்தேதி திட்டமிட்ட படி வேலை நிறுத்தம் நடக்காது என்றும் கூறப்படுகிறது. வேலை நிறுத்தப் போராட்டம் பிசுபிசுத்ததையடுத்தெ வேறு வழியின்றி விசால் முதல்வரை சந்தித்தார் என்கிறார்கள்.