கவுதம் மேனனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு!
தமிழில் கோ,யான்,வீரா, விடுதலை உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் எஸ்.எல்ரெட் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்கறிஞர் ரமேஷ் பாபு மூலம் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார்.
அதில், “நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படம் தயாரிக்க இருந்தேன். அப்படத்தை இயக்குவதற்காக இயக்குநர் கவுதம் மேனனை சந்தித்து ரூ 4 கோடியே 25 லட்சம் ரூபாயை வழங்கி கடந்த 2008 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.ஆனால், திரைப்படத்தை நான் தயாரிக்கவில்லை. எனவே நான் கொடுத்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று கேட்ட போது, இயக்குநர் கவுதம் மேனன் பணத்தை கொடுக்கவில்லை. மேலும், திரைப்படத்தை இயக்குவதாகவும் அவர் உத்தரவாதம் வழங்கவில்லை. எனவே நான் வழங்கிய தொகையை திருப்பி தருமாறு உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ரூ.4 கோடி 25 லட்சத்தை மனுதாரர் எல்ரெட் குமாருக்கு வழங்குமாறு கடந்த 2022 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தார்.ஆனால், தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இயக்குநர் கவுதம் மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் முன்பு நடந்து வந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அந்த தீர்ப்பில், இயக்குநர் கவுதம் மேனன் பட தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு 4 கோடியே 25 லட்சம் ரூபாயை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளனர்.