‘பியான்ட் பிக்சர்ஸ்’ தயாரித்து, மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், ஹேப்பிராஜ். இதில், ஜி வி பிரகாஷ் குமார், ஸ்ரீ கௌரி பிரியா, ஜார்ஜ் மரியான், கீதா கைலாசம், அப்பாஸ், பிரார்த்தனா நாதன், அதிர்ச்சி அருண், மதுரை முத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஜார்ஜ் மரியான் – கீதா கைலாசம், இவர்களின் ஒரே மகன் ஜிவி பிரகாஷ், கணினிப் பொறியியல் படித்தவர். இவர்கள் வசித்து வரும் கிராமத்தில், ஜார்ஜ் மரியானையும், ஜிவி பிரகாஷையும் அந்த கிராம மக்களில் சிலர், இவர்களை உருவக்கேலி செய்து வருவதுடன், ‘குதிரை முட்டை’ என பட்டப்பெயர் வைத்தும் அழைத்து வருகிறார்கள். இதனால், ஜிவி பிரகாஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அந்தப் பட்டப்பெயரினாலேயே இவரது காதலும் கைகூடாமல் போகிறது. அதன் காரணமாக தன்னைப்பற்றி எதுவும் தெரியாத பெங்களூருக்கு சென்று ஒரு ஐ டி கம்பெனியில் வேலை செய்கிறார். அப்போது அவருக்கும் கௌரிப்பிரியாவுக்கும் காதல் உருவாகி கல்யாணம் வரை செல்கிறது. நவநாகரீகமாக வாழ்ந்து வரும் கௌரிப்பிரியா குடும்பத்தினருக்கு தன்னுடைய கிராமத்து வாழ்க்கை தெரிந்து, அதனால் திருமணம் தடைபட்டுவிடுமோ என நினைத்து அஞ்சுகிறார், ஜி வி பிரகாஷ். இதன்பிறகு என்ன நடந்தது? என்பது தான், குடும்பத்தினருடன் பார்த்து மகிழத்தக்க வகையில் அமைக்கப்பட்டிருக்கும், ஹேப்பிராஜ் திரைப்படத்தின் திரைக்கதையும், க்ளைமாக்ஸூம்!
உருவக்கேலி செய்வதால் ஏற்படும் சோகங்களையும், தாழ்வுமனப்பான்மையும் ஜி வி பிரகாஷ்குமார் கதாபாத்திரத்தின் வாயிலாகவும். கேலிப்பேச்சுக்களை உதாசீனப்படுத்திவிட்டு, வாழ்க்கையில் முன்னேற்றத்தை மட்டுமே நோக்கி சென்றால், அனைத்திலும் வெற்றி பெறலாம் என்பதை ஜார்ஜ் மரியான் கதாபாத்திரத்தின் மூலமாகவும் சிறப்பாக சொல்லியிருக்கிறார், இயக்குநர், மரிய ராஜா இளஞ்செழியன். இது, கேலிப்பேச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுக்கும் வகையில் இருப்பதால் இயக்குநரை பாராட்டலாம்.
ஹேப்பி ஆனந்தராஜ், கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜி வி பிரகாஷ், படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிக்க வைக்கிறார். முதல் காதல், ‘சின்னக் குதிரை முட்டை’ எனும் பட்டப்பெயரால் பணால் ஆகும் போது அவர் காட்டும் பாவனைகள், அவர் மீது பரிதாபத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது அவரது தோற்றம், டான்ஸ், நடிப்பு என அனைத்தும் விழுந்து விழுந்து சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறது.
ஆசிரியராக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன் சிறப்பாக தனது கதாபாத்திரத்தினை உணர்ந்து நடித்திருக்கிறார். கேலிப்பேச்சுக்கும், ஏச்சுக்கும் நடுவே தனது வாழ்க்கையை உயர்த்தியது குறித்து அவர் பேசும் காட்சிகள் பலருக்கு புதிய உத்வேகத்தை கொடுத்து சாதிக்க தூண்டும். அவரது சிறந்த நடிப்புக்காக விருதுகள் கொடுத்து கௌரவிக்கலாம்.
ஸ்ரீ கௌரி பிரியா, இளமை அழகுடன் மிளிர்கிறார். நடிக்கவும் செய்திருக்கிறார். கீதா கைலாசத்தின் கதாபாத்திரம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. இவரது கதாபாத்திரம் போல் இன்னும் சில கதாபாத்திரங்களின் வடிவமைப்பில் கோட்டை விட்டுள்ளார், இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன். அப்பாஸ், பிரார்த்தனா நாதன், அதிர்ச்சி அருண், மதுரை முத்து ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில், ‘ஆடினே இருப்பேன்..’ பாடல் இளைஞர்களுக்கு குதூகலத்தை கொடுக்கிறது. பின்னணி இசையும் ஓகே தான். மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதி இன்னும் சுவாரசியமாக இருக்கிறது. மொத்தத்தில், குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய வகையில் இருக்கிறது. இந்த ஹேப்பி ராஜ்.












