‘நீ ஃபார் எவர்’ – விமர்சனம்!
‘நீ ஃபார் எவர்’ திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார், அசோக் குமார் கலைவாணி. ஜென் ஸ்டுடியோஸ்’ சார்பில், புகழ் மற்றும் ஈடன் தயாரித்துள்ளனர். இதில் சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி, ஓய்.ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, வித்யா, vj பிராது, நோபல் கே ஜேம்ஸ், எம்.ஜே. ஸ்ரீராம், ரித்திகா ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை, அஸ்வின் ஹேமநாத். ஒளிப்பதிவு, ராஜா பட்டாச்சார்ஜி.
சுதர்சன் கோவிந்தின் அம்மா, பெற்றோரை மீறிக் காதல் திருமணம் செய்து கொண்டு கணவரால் கைவிடப்பட்ட நிலையில், குழந்தைகளுடன் பிறந்த வீட்டிற்கு வருகிறார். அதன் பிறகு, சுதர்சன் கோவிந்த் அவரது தாத்தா ஓய்.ஜி. மகேந்திரனின் கட்டுப்பாட்டில் வளர்கிறார். தன்னுடைய அலுவலகத்திற்காக ஒரு மேட்ரிமோனி சாட்டிங் ஆப்பினை உருவாக்குகிறார். காதல் அனுபவம் இல்லாத அவரது ஆப் நிராகரிக்கப்படுவதுடன், காதலைப்பற்றிய அனுபவத்தின் மூலம் உருவாக்கப்பட்டால் மட்டுமே அது முழுமையான ஆப் ஆக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால், போலியாக காதலித்து அந்த அனுபவத்தின் மூலம் ஆப்பினை மறுசீரமைக்க முடிவுசெய்கிறார். இந்நிலையில் இயக்குநராக விரும்பும் அர்ச்சனா ரவியும் போலியாக ஒருவரை காதலித்து அந்த அனுபவத்தின் மூலம் இயக்குநராக முடிவு செய்கிறார். அதன்படி, இந்த இருவரும் ஒரு ஆப்பில் மூலம் சந்திக்கின்றனர். இதன்பிறகு என்ன நடந்தது? என்பது தான் ‘நீ ஃபார் எவர்’ படத்தின் கதை.
காதல், வீட்டை விட்டு ஓடிப்போவது. பொருளாதாரா சூழல்களினால் பிரிவு. குடும்பப் பகை. மறத்தல், மன்னித்தல். இவைகளை ஒருங்கிணைத்து ஒரு சுவாரசியமானப் படத்தினை கொடுக்க முயற்சித்திருக்கிறார், இயக்குநர் அசோக் குமார் கலைவாணி. ஆனால், அவரது முயற்சி பலனளிக்கவில்லை.
நாயகனாக நடித்திருக்கும் சுதர்சன் கோவிந்த். இறுவேறு விதமான நடிப்பினை கொடுத்திருக்கிறார். அது ரசிக்கும்படியே இருக்கிறது. நாயகியாக அர்ச்சனா ரவி. திரைப்பட இயக்குநராக விரும்பும் கதாபாத்திரத்தில் கையில் சிகரெட்டுடன் வலம் வருகிறார். குறை சொல்ல முடியாத நடிப்பினையும் வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் vj பிராது, நோபல் கே ஜேம்ஸ் ஆகிய இருவரும் சிரிக்க வைப்பதாகா நினைத்து பார்வையாளர்களை கடித்து வைக்கிறார்கள். கதாநாயகன் சுதர்சன் கோவிந்தின் தாத்தாவாக நடித்திருக்கும் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு சொல்லொக்கொள்ளும்படியாக அவரது கதாபாத்திரம் அமையவில்லை. கதாநாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை, அக்காவாக நடித்திருக்கும் நடிகை, அப்பாவாக நடித்திருக்கும் நிழல்கள் ரவி, ஆகியோரின் கதாபாத்திரங்களும் பெரிதாக ஈர்க்கவில்லை.
ராஜா பட்டாச்சார்ஜியின் ஒளிப்பதிவு சற்று ஆறுதல் தருகிறது. இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமநாத் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் குறை சொல்லும்படியில்லை. நேர்த்தியாக வடிவமைக்கப்படாத கதாபாத்திரங்களும், அலுத்தமில்லாத காட்சிகளும் படத்தின் பலவீனமாக இருக்கின்றன. மற்றபடி எதுவுமில்லை.
‘நீ ஃபார் எவர்’ – கவனம் ஈர்க்கவில்லை!