ஈரான் மீதான தாக்குதலை 2 வாரங்களுக்கு அமெரிக்கா நிறுத்திவைத்து போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது இதை பலநாடுகளும் வரவேற்றுள்ளது இந்நிலையில், போர் நிறுத்தத்தை வரவேற்று, கவிஞர் வைரமுத்து தனது முகநூலில் ,” இப்படியே நீடிக்கட்டும்” என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார் .
அதன் விபரம் வருமாறு,
“இப்படியே நீடிக்கட்டும்
தற்காலிகப் போர்நிறுத்தம்
நிரந்தரமாகட்டும்
ஹோர்முஸ் நீரிணையும்
அகந்தையால் அடைக்கப்பட்ட
இதயங்களும்
திறந்தே இருக்கட்டும்
நாகரிகத்தின்
பிறப்பிடமாகிய ஈரான்
அநாகரிகத்தால்
அழிந்துபடக் கூடாது
உலகத்தின் எந்தவிளிம்பில்
போர் நிகழ்ந்தாலும்
இன்னொரு விளிம்பில்
எதிர்வினை இருக்கும்
டென்மார்க்கில் ஒரு பசு
பூச்சி மருந்தடித்த
புல்லைத் தின்றால்
ஆஸ்திரேலியாவில்
சாக்லேட் தின்னும் குழந்தை
சாகக் கிடக்கும்
முடிவுக்கு வரட்டும்
யுத்தம்
ஏவுகணைகளையும்
ட்ரோன்களையும்விடவும்
பேச்சுவார்த்தைகள்
வலிமையானவை
தோட்டாக்களில்
தொடங்கிய போர்
சொற்களில் முடியட்டும்
கல்லெறிந்து விரட்டுங்கள்
கழுகுகளை;
தானியமிட்டுக் கூப்பிடுங்கள்
புறாக்களை….
கவிஞர் வைரமுத்து எழுதிய இந்த நெகிழ்ச்சி கவிதை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .












