ஊட்டியில்சலூன் கடை ஒன்றில் முடிதிருத்தும் தொழிலாளியாக வேலை பார்க்கும் கண்ணன் (அருள்நிதி), காது கேளாத, வாய் பேசாத இளைஞர். நடிகர் விவேக்கின் தீவிர ரசிகர். தான் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் அனைவருக்கும் தன்னால் முடிந்த சின்னச் சின்ன உதவிகள் செய்து அவர்களின் அன்பு பிடிக்குள் சிக்கி வலம் வருகிறான்.கண்ணனின் நெருங்கிய நண்பன் வருக்கி (செந்தில்) மற்றும் சிறு வயது தோழி சந்தியா (தான்யா). இந்நிலையில், திடீரென்று ஊட்டிக்கு வரும் நடிகர் விவேக்கை சந்திக்கிறான் கண்ணன். இக்கட்டான நேரத்தில் அவன் அவருக்கு செய்யும் உதவியால், விவேக்குக்கு அவனை மிகவும் பிடித்துப் போகவே இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகின்றனர். கண்ணன் மூலமாக வருக்கி , தோழி சந்தியாஆகியோரும் விவேக்குக்கு நெருக்கமாகிறார்கள். சந்தியாவுக்குக் கண்ணன் மீதுள்ள நட்பு, ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. தன் காதலைக் கண்ணனிடம் தெரிவிக்கிறாள். ஆனால் கண்ணனோ,ஆவேசத்துடன் சந்தியாவின் காதலைக் நிராகரிக்கிறான்.சந்தியாவின் உண்மையான காதலை எடுத்துச் சொல்லும் விவேக்கையும் அவமதிக்கிறான்.
கண்ணன் இப்படி நடந்துகொள்ள காரணம் என்ன? இறுதியில் சந்தியாவின் காதல் நிறைவேறியதா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மீதிக்கதை!.
அருள்நிதி தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக நன்றாகவே பயன் படுத்தி கொண்டுள்ளார். நடிப்பில் இன்னும் முயற்சித்தால் திரையுலகில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து விடுவார் என்பது உறுதி! தான்யா அழகாக இருப்பதோடு நன்றாக நடிக்கவும் செய்கிறார். இந்த பெண் நல்ல கதை மற்றும் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்தால் கோலிவுட்டில் ஜொலிப்பார்! இப்படத்திற்கு பின் ‘பிசி’யான நடிகைகளில் ஒருவராக மாறும் வாய்ப்பு உள்ளது.விவேக் நம்மை சிரிக்க வைப்பதிலும், அதேபோல் எமோஷனல் காட்சிகளிலும் வெளுத்து வாங்கியுள்ளார்.’ஜேம்ஸ் கேமரூனின் அவதார் பார்த்திருக்கீங்களா? என செல் முருகன் கேட்க, ‘அவர் அவுத்தாருன்னா நான் ஏன்டா பார்க்கணும்?’, ‘வாழ்க்கைங்கிறது வாழைக்காய் மாதிரி, நீளமா சீவினா பஜ்ஜி; குறுக்கே சீவினா சிப்ஸ்” என்பன போன்ற காமெடி பஞ்ச் வசனங்களிலும், நண்பன் பஞ்சு சுப்புவின் கடைசி ஆசையை நிறைவேற்றிவிட்டுக் கண்கலங்குவதாய் இருக்கட்டும், பிரமாதம் விவேக்!.விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை காட்சிகளுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. பாடல்கள் மனதுக்குள் பதிய மறுக்கிறது.எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய்,செல் முருகன் மற்றும் செந்தில் தங்கள் பங்கை வழக்கம்போல் செய்துள்ளனர் செல் முருகன் மற்றும் செந்தில் எம்.எஸ்.விவேகானந்தனின் ஒளிப்பதிவு ஊட்டியின் குளிர்ச்சியில் சென்னை வெயிலை கொஞ்சம் மறக்க செய்கிறது. இயக்குனர் ராதாமோகன் காட்சிகளில் தொய்வு,மற்றும் நாடகத்தனம் மிளிர்வதை குறைத்து, உணர்வுகளை அழுத்தமாய் பிரதிபலிக்கும் காட்சிகளை அதிகரித்திருந்தால், பிருந்தாவனத்தில் பூத்து குலுங்கும் மலர்களின் நறுமணம் மனதை இன்னும் ரம்மியமாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை!