சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கபாடி வீராங்கனையை, பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக வெளியாகியுள்ள செய்தி, விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விரைந்து விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட வீராங்கனைக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். மேலும், வீராங்கனைகள் அச்சமின்றியும், பாதுகாப்பாகவும், உரிய மரியாதையுடனும் பயிற்சி பெறக்கூடியச் சூழலை உருவாக்க வேண்டியது அரசு மற்றும் விளையாட்டு அமைப்புகளின் பொறுப்பாகும்.
அரசு மற்றும் தனியார் விளையாட்டு அகாடமிகள், பயிற்சி மையங்கள் மற்றும் விளையாட்டு விடுதிகளில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் புகார்களைத் தெரிவிக்க பிரத்யேகக் குழுவை அமைத்து, வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அளி்க்கும் புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் கொடுப்பவர்களின் பெயரை ரகசியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
அனைத்துப் பயிற்சியாளர்களின் பின்னணியை சரிபார்ப்பதுடன், குறிப்பிட்ட காலஇடைவெளியில் அவர்களுக்கு ஒழுக்கப் பயிற்சி வழங்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகளின் பாதுகாப்பு அம்சங்கள், பெற்றோர் தொடர்பு முறை மற்றும் பயிற்சிக் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.
அனைத்து பயிற்சி மையங்களிலும் பொதுப் பகுதிகளில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். வருகைப் பதிவு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளை கட்டாயமாக்க வேண்டும். அதேநேரத்தில், தனியுரிமை மதிக்கப்பட வேண்டும். வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஆண்டுதோறும் பாலியல் தொந்தரவு தடுப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, தொழில்முறை ஒழுக்கம் மற்றும் சட்ட விழிப்புணர்வு தொடர்பான பயிற்சிகளை வழங்க வேண்டும்.
விளையாட்டு வெறுமனே பதக்கங்களை வெல்வதற்கான தளம் மட்டுமல்ல; நம்பிக்கை, ஒழுக்கம், பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் மனிதநேயத்தை வளர்க்கும் உயர்ந்த சமூக அமைப்பு என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை மூலம் நீதி கிடைக்கச் செய்வதே ஜனநாயக சமூகத்தின் அடிப்படை கடமையாகும்.
-திரு. E.T.அரவிந்ராஜ்,
மாநிலச் செயலாளர் – விளையாட்டு மேம்பாட்டு அணி,
மக்கள் நீதி மய்யம்.












