தமிழ் திரையுலகில் இளையதலைமுறை ரசிகர்களின் பேராதரவைப்பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதி, இரண்டு ஆண்டுகால உலகளாவிய இசைப் பயணங்களுக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் தடம் பதிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகிறது
இளமை துள்ளும் கதாபாத்திரங்கள், காதல், நடனம் மற்றும் இசைக் கொண்டாட்டத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டை முன்னிட்டு, சென்னையில் படக்குழுவினர் பங்கேற்ற அதிகாரப்பூர்வப் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது .
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹிப்ஹாப் தமிழா ஆதி,
கடந்த இரண்டு ஆண்டுகள் உலகம் முழுவதும் பல்வேறு இசைப் பயணங்களை மேற்கொண்ட பிறகு, மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தின் மூலம் ஊடக நண்பர்களையும் ரசிகர்களையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாகத் தங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருக்கும் தயாரிப்பாளர் சுந்தர் சி. மற்றும் குஷ்பு ஆகியோரின் முன்னிலையில் அமைந்தது தமக்குக் கூடுதல் உத்வேகத்தை தந்துள்ளதாக நெகிழ்ந்தார்.

ஹிட்டடித்த முதல் பாகத்திற்கும் தற்போதைய இரண்டாம் பாகத்திற்கும் உள்ள முக்கியக் கதை வேறுபாட்டைப் பகிர்ந்து கொண்ட ஆதி, முந்தைய ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் முழுக்க முழுக்க தனது சொந்த வாழ்க்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு பயோபிக் படைப்பாக இருந்தது. ‘மீசைய முறுக்கு 2’ உலகளாவிய கதைக்களத்தைக் கொண்டது.
இது இசை, இசைக் கலைஞர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கையைப் பற்றிய கதை என்றும், இசையையே தங்களது முழுநேர வாழ்க்கைப் பாதையாகவும் லட்சியமாகவும் தேர்ந்தெடுக்கும் எளிய மனிதர்களின் கனவுகள், அவர்களின் அன்றாடப் போராட்டங்கள், உணர்ச்சிப்பூர்வமான பயணங்கள் மற்றும் ஒட்டுமொத்த இசைக் கலைஞர்களின் வாழ்வியலைக் கொண்டாடும் ஒரு பொதுவான கதையாக இப்படம் தியேட்டர்களில் ரசிகர்களைக் கவரும் என்றும் நம்பிக்கையுடன் கூறிய அவர்,
இத்திரைப்படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, கானா கலைஞர்களின் எதார்த்தமான உலகமும் அவர்களின் வாழ்வியலும் திரைக்கதையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்றும் நிச்சயம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்றும் கூறினார்.












